மாட்டுவண்டி பந்தயத்தின்போது பார்வையாளர் மேடை சரிந்து ஒருவர் பலி

புனே,
புனே புறநகர் பகுதியான லோனி கால்போர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மிகப்பெரிய அளவில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் போட்டி தொடங்கியது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் போட்டியை அமர்ந்து பார்த்து ரசிப்பதற்காக போட்டி குழுவினர் இரும்பினால் ஆன மேடை ஒன்றை தற்காலிகமாக அமைத்து இருந்தனர். இந்தநிலையில் போட்டி நடந்து கொண்டு இருந்தபோது அப்பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
வேகமாக வீசிய காற்று மற்றும் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு மேடை சரிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் பார்வையாளர்கள் 4 பேர் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இருப்பினும் இதில் 46 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் பாலாசாகேப் கோலி என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






