சிறுவனை அடித்து கொலை செய்த மந்திரவாதி மீது வழக்குப்பதிவு

புனே,
சாங்கிலி மாவட்டம் கவத்தே மகாங்கல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஆர்யன் லாண்டே(வயது14). கடந்த சில தினங்களுக்கு முன்பு அவனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நோய் குணமாகாததால் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் ஷிர்கூரில் உள்ள மந்திரவாதி அப்பாசாகேப் காம்ளே என்பவரிடம் அழைத்து சென்றால் சரி யாகி விடும் என கருதினர். இதன்படி சிறுவன் ஆர்யன் லாண்டேவை குடும்பத்தினர் அங்கு அழைத்து சென்றனர்.
அங்கு மந்திரவாதி அப்பாசாகேப் காம்ளே சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், பேயை விரட்டினால் நோய் சரியாகி விடும் என தெரிவித்தார். மேலும் பேய் விரட்டுவதாக கூறி சிறுவனை தாக்கி உள்ளார். இதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். இதனையடுத்து அவனை ஷிர்கூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மிராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆர்யன் லாண்டே உயிரிழந்தான்.
இது பற்றி தகவல் அறிந்த மூடநம்பிக்கைகள் நல ஆர்வலர்கள் சம்பவம் குறித்து மகான்கல் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.