மும்பை அருகே காதலி உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரன்- உடல் பாகங்களை தெருநாய்க்கு வீசிய பரபரப்பு தகவல்


தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ஒருவர் தனது காதலியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்தான். மேலும் காதலியின் உடல் பாகங்களை தெருநாய்களுக்கு போட்ட அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்தது.

மும்பை,

மும்பையை அடுத்த மிராரோடு கிழக்கு கீதா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் வசித்து வந்தவர்கள் சரஸ்வதி வைத்யா(வயது36) மற்றும் மனோஜ் சனே(56).

திருணம் செய்யாமல்...

காதல் ஜோடியான இவர்கள் திருணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்தனர். சரஸ்வதி ஆதரவற்ற பெண் என்று கூறப்படுகிறது. மனோஜ் ரேசன் கடையில் வேலை செய்து வருகிறார்.

இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருந்தபோதிலும் காதல் வலையில் விழுந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக கீதாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் இனித்த இவர்களது காதல் வாழ்க்கை, பின்னர் முட்டல், மோதல் என்று கலகத்தை சந்தித்தது.

பிணவாடை

இந்தநிலையில் தான் நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்து பிணவாடை வீசியது. இதுபற்றி மனோஜிடம் அக்கம்பக்கத்தினர் கேட்டனர். இதனால் பயந்து போன அவர் ஒரு கருப்பு பையுடன் வெளியேறினார். பின்னர் இரவில் வீடு திரும்பினார்.

சரஸ்வதியின் நடமாட்டம் இல்லாத நிலையில், மனோஜின் நடவடிக்கையில் சந்தேகத்தை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மனோஜ் வீட்டு கதவை தட்டினர். அப்போது கதவை திறக்க மனோஜ் மறுத்துவிட்டார். இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. படுக்கையறையில் பிளாஸ்டிக் பை மற்றும் ரத்தக்கறை படிந்த ரம்பத்தை கண்டனர்.

வெட்டப்பட்ட உடல் துண்டுகள்

போலீசார் சமையலறைக்குள் நுழைந்தபோது திகைத்து விட்டனர். அங்கு பிரஷர் குக்கரில் வேகவைத்த மனித சதைகள் மற்றும் ஒரு சில பாத்திரங்களில் பெண்ணின் தலைமுடி கிடப்பதை கண்டுபிடித்தனர். பாதி எரிந்த எலும்புகள் மற்றும் உடல் துண்டுகள் வாளி மற்றும் டப்பாக்களிலும் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி மனோஜிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். உரிய முறையில் விசாரித்தபோது, சரஸ்வதியை கொலைசெய்து உடலை துண்டு துண்டாக வெட்டியதையும், உடல் பாகங்களை குக்கரில் வைத்து வேக வைத்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் இதுபற்றிய பரபரப்பு தகவல் வெளியானது.

அடித்து கொலை

தாலி கட்டாமல் காதல் முடிச்சில் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி இடையே சமீபநாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இந்தநிலையில் காதலி மீது மனோஜிற்கு தீராத வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. காதலியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்தார்.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின் போது காதலி சரஸ்வதியை மனோஜ் அடித்து கொன்றார். பின்னர் தடயத்தை மறைக்க குரூர முயற்சியில் இறங்கினார். மரம் அறுக்கும் ரம்பத்தால் உடலை துண்டு துண்டாக கூறு போட்டார். சுமார் 20 துண்டுகளாக உடலை வெட்டியதாக தெரிகிறது. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்தும் உள்ளார். அவற்றை பெரிய குக்கரில் போட்டு வேக வைத்து உள்ளார். வேக வைத்த உடல் பாகங்களை தெரு நாய்களுக்கும் உணவாக அளித்துள்ளார்.

சரஸ்வதியின் உடல் சுமார் 20 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில், அவற்றில் 12 முதல் 13 துண்டுகள் மட்டுமே போலீசாரால் கைப்பற்ற முடிந்தது. மற்ற உடல் பாகங்களை தேடிவருகிறார்கள்.

கைது

இந்த கொலை கடந்த 4-ந் தேதியே நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மனோஜ் வழக்கத்துக்கு மாறாக கடந்த 3 நாட்களாக தெருநாய்களுக்கு மாமிச துண்டுகளை உணவாக அளித்து வந்துள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் உன்னிப்பாக கவனித்து வந்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து குட்டு அம்பலமாகி உள்ளது.

இந்த கொடூர கொலையை செய்த மனோஜை போலீசார் கைது செய்து, கொலை பின்னணி குறித்து அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கைதான மனோஜை நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கொலையின் உண்மையான பின்னணியை கண்டறிய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை வருகிற 16-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

முழுமையான விசாரணைக்கு பிறகே உண்மை வெளிவரும் என்று நயா நகர் போலீசார் தெரிவித்தனர்.

தொடரும் கொடூரம்

மும்பையை அடுத்த பால்கர் மாவட்டத்தை சேர்ந்த ஷரத்தா என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் அப்தாப் பூனாவாலா கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் அடைத்து வைத்து அவற்றை காட்டில் வீசிய சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது. இந்தநிலையில் அதையும் மிஞ்சும் வகையில் மற்றொரு திகில் சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசு விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரை கற்பழித்து கொலை செய்த காவலாளி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குள் நடந்த மற்றொரு கொடூர கொலை அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பகுதியில் பெண்களுக்கு எதிரான அதிபயங்கர சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த பிரச்சினையில் போலீஸ் இலாகாவை தன்வசம் வைத்திருக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story