இணைய வழியில் கடன் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கும்பல்

இணைய வழியில் கடன் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
இணைய வழியில் கடன் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ரூ.3 ஆயிரம் கடன்
மும்பை கோவண்டியை சேர்ந்த டாக்சி டிரைவரின் 22 வயது மனைவிக்கு அவசர தேவைக்காக பணம் தேவைப்பட்டது. பலரிடம் உதவி கேட்டு இருந்தார். கிடைக்காமல் போனதால் கடந்த மாதம் 25-ந்தேதி செல்போனில் விளம்பரம் ஒன்று வந்ததை கண்டார். இதில் கிரிடெட்லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தார்.
பின்னர் அதில் கேட்கப்பட்டு இருந்த ஆதார்கார்டு, பான்கார்டு, இமெயில் மற்றும் தொடர்பு நம்பர்கள் போன்றவை கேட்கப்பட்டு இருந்தது. இதன் படி செயல்பட்ட அப்பெண்ணிற்கு ரூ.3 ஆயிரம் கடன் கிடைத்தது.
ஆபாச புகைப்படம்
சில நாட்கள் கழித்து கடந்த 2-ந் தேதி கடனாக பெற்ற பணத்தை வழங்கும்படி குறுந்தகவல் வந்தது. இதனை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சில மணி நேரம் கழித்து அப்பெண்ணின் புகைப்படத்தை மற்றொரு பெண்ணின் நிர்வாண புகைப்படத்துடன் சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் நம்பருக்கு வெவ்வேறு அழைப்புகள் விடுத்து ஆபாசமாக பேசினர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை மிரட்டி வரும் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






