டி.வி. நடிகையிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய கும்பல்

சமூகவலைதள கணக்கை முடக்கி டி.வி. நடிகையிடம் கும்பல் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
சமூகவலைதள கணக்கை முடக்கி டி.வி. நடிகையிடம் கும்பல் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பணம் கேட்டு மிரட்டல்
மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்தவர் டி.வி. நடிகை வித்யா பிரசாத் (வயது35). இவரது இன்ஸ்டாகிராமுக்கு சமீபத்தில் நடிகர் ஒருவரிடம் இருந்து லிங் ஒன்று வந்தது. நடிகை அந்த லிங்கை திறந்து பார்த்தார். லிங்க் திறந்தவுடன், நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மர்ம ஆசாமிகள் நடிகையை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் ரூ.50 ஆயிரம் தரவில்லை எனில் நடிகையின் படங்களை ஆபாச இணையதள பக்கங்களில் பதிவேற்றிவிடுவோம் என மிரட்டினர்.
போலீசில் புகார்
இதையடுத்து நடிகை, எந்த நடிகரின் சமூகவலைதள கணக்கில் இருந்து லிங் வந்ததோ அந்த நடிகரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் நடிகரின் சமூகவலைதள கணக்கும் மர்ம ஆசாமிகளால் முடக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கும்பல் இதே பாணியில் மேலும் 2 நடிகைகளை மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து டி.வி. நடிகை வித்யா பிரசாத் சம்பவம் குறித்து வெர்சோவா போலீசில் புகார் அளித்தார். போலீசார் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






