தீ விபத்தில் சிக்கிய தாய், மகளை மீட்ட கோவிந்தாக்கள்
மிராபயந்தர் சந்தரேஷ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தாய், மகளை கோவிந்தாக்கள் பத்திரமாக மீட்டனர்
தானே,
தானே மாவட்டம் மிராபயந்தர் சந்தரேஷ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று முன்தினம் மின்மீட்டர் அறையில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் அங்கிருந்து வெளியான கரும்புகை கட்டிடம் முழுவதும் பரவியது. 2-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்த பெண் மற்றும் அவரது மகள் வெளியே வர முடியாமல் கரும்புகையில் சிக்கி கொண்டனர். இது பற்றி அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கட்டிடத்தின் வெளியே மக்கள் திரண்டு நின்றனர். அப்போது தஹி ஹண்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 கோவிந்தாக்கள் அந்த வழியாக சென்றனர். மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்ததை கண்டு நிலவரத்தை அறிந்தனர். உடனே சிறிதும் தாமதிக்காமல் 2-வது மாடிக்கு தாவி ஏறினர். அங்கிருந்த ஜன்னல் கிரில்லை அகற்றி எடுத்தனர். பின்னர் உள்ளே சிக்கி இருந்த பெண் மற்றும் அவரது மகளை பத்திரமாக வெளியேற்றினர். கோவிந்தாக்களின் இந்த உதவியை அப்பகுதி மக்கள் பாராட்டினர். சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் அங்கு சென்று கட்டிடத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.