கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் படுக்கை எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படும்; தானே மாநகராட்சி கமிஷனர் தகவல்

கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் படுக்கை எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படும் என தானே மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.
தானே,
கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் படுக்கை எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படும் என தானே மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.
18 நோயாளிகள் உயிரிழப்பு
தானே மாவட்டம் கல்வா பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டதாக தானே மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. 500 நோயாளிகள் சிகிச்சை பெற கூடிய கல்வா ஆஸ்பத்திரியில் 600 பேர் சிகிச்சை பெற்று வந்ததாக தானே மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நோயாளிகள் மாற்றம்
இந்தநிலையில் கல்வா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் இல்லாத நோயாளிகள், புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மட்டும் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார். ஆஸ்பத்திரி மாற விரும்பும் நோயாளிகள் மட்டுமே வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு வருவதாக கல்வா ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அனிருத்தா மல்காவ்கர் கூறினார்.
இருமடங்கு படுக்கை அதிகரிக்கப்படும்
இதற்கிடையே கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரி படுக்கை 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளதாக தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறியதாவது:- கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியை மேம்படுத்த மாநில அரசு சமீபத்தில் ரூ.60 கோடி ஒதுக்கி உள்ளது. ஆஸ்பத்திரியின் படுக்கை எண்ணிக்கை 500-யில் இருந்து 1,000 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. பயிற்சி டாக்டர்களுக்கு அனைத்து வசதிகளுடன் விடுதி கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று கல்வா ஆஸ்பத்திரியில் அதிரடி ஆய்வை மேற்கொண்டார்.






