ஏ.டி.எம் எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளை கும்பல்- போலீசார் தீவிர விசாரணை


ஏ.டி.எம் எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளை கும்பல்- போலீசார் தீவிர விசாரணை
x

சாங்கிலியில் ஏ.டி.எம் எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளை கும்பலை பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

சாங்கிலி,

சாங்கிலியில் ரூ.22.34 லட்சத்துடன் ஏ.டி.எம் எந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பல் தூக்கி சென்றது

மராட்டிய மாநிலம் ரத்னகிரி- நாக்பூர் நெடுஞ்சாலை காவ்தே மகான்கல் தாலுகா ஷிர்தோன் கிராமத்தில் மகாராஷ்டிரா வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஜூப்பில் கும்பல் வந்தனர். பின்னர் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்து கண்காணிப்பு கேமரா மற்றும் எந்திரத்தின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் பணம் இருந்த எந்திரத்தை அலேக்காக தூக்கி ஜூப்பில் போட்டு கடத்தி சென்றனர். சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த நிகம் என்பவர் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார்.

ரூ.22.34 லட்சம் கொள்ளை

ஆனால், அந்த கும்பல் அவரை நோக்கி துப்பாக்கியால் சில ரவுண்ட்கள் சுட்டனர். இந்த சம்பவத்தில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் பணம் இருந்த ஏ.டி.எம் எந்திரத்துடன் அக்கும்பல் தப்பி சென்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.22 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.டி.எம் எந்திரத்துடன் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-----


Next Story