தாயை கொலை செய்து உடலை மலை பள்ளத்தாக்கில் வீசிய மகன்- வேலைக்காரருடன் சிக்கினார்


தாயை கொலை செய்து உடலை மலை பள்ளத்தாக்கில் வீசிய மகன்- வேலைக்காரருடன் சிக்கினார்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஜூகுவில் சொத்துக்காக தாயை கொலை செய்து பெட்டியில் உடலை வைத்து மலை பள்ளத்தாக்கில் வீசிய மகன் மற்றும் உடந்தையாக இருந்த வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஜூகுவில் சொத்துக்காக தாயை கொலை செய்து பெட்டியில் உடலை வைத்து மலை பள்ளத்தாக்கில் வீசிய மகன் மற்றும் உடந்தையாக இருந்த வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

தாய் கொலை

மும்பை ஜூகு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வீனா கபூர் (வயது74). கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீனா கபூரின் மூத்த மகன் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் தெரிந்தவர் ஒருவரிடம் தாயை வீட்டில் சென்று பார்க்குமாறு கூறினார். அதன்படி அவர் சென்று பார்த்தபோது வீனா கபூர் வீட்டில் இல்லை. எனவே அவர் இதுதொடர்பாக ஜூகு போலீசாரை உஷார்படுத்தினார்.

இதையடுத்து போலீசார் வீனா கபூருடன் வசித்து வந்த மற்றொரு மகன் சச்சினை (40) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தாயை கொலை செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

சொத்து தகராறு

வீனா கபூருக்கும், அவரது மகன் சச்சினுக்கும் சொத்து தகராறு இருந்து உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை இரவு தாய், மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சச்சின், தாயை பேஸ்பால் மட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த வீனா கபூர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவர் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டல் (25) உதவியுடன் உடலை அட்டை பெட்டியில் போட்டுள்ளார். மேலும் அதை காரில் எடுத்து சென்று மாதேரான் மலை பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.

மகன், வேலைக்காரர் கைது

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து தாயை கொலை செய்த சச்சின், அவருக்கு உடந்தையாக இருந்த சோட்டு மண்டல் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் உடலை மாதேரான் மலை பள்ளத்தாக்கில் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் மும்பையில் சொத்துக்காக மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர், மாமியாரை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நடந்தது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சொத்துக்காக மகன், தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story