முன்னாள் காதலனை மும்பை வரவழைத்து காலை உடைத்த பெண்- அக்காளுடன் கைதானார்

திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்த முன்னாள் காதலனை மும்பை வரவழைத்து காலை உடைத்த பெண் மற்றும் அவரது அக்காளை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்த முன்னாள் காதலனை மும்பை வரவழைத்து காலை உடைத்த பெண் மற்றும் அவரது அக்காளை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் காதலன் தொல்லை
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது23). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆமதாபாத்தை சேர்ந்த மனிஷ் அருண் (25) இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். 2 பேரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் 2 பேருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் மனிஷ் அருணுக்கு சரியான வேலை இல்லாத காரணத்தால் திருமணம் நின்றது. ஜெயஸ்ரீ வாலிபருடன் பேசுவதை நிறுத்தினார். ஆனால் மனிஷ் அருண், ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீக்கு தொல்லை கொடுத்து வந்தார். வாலிபரின் தொல்லை எல்லை மீறி செல்லவே, ஜெயஸ்ரீ அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்.
கால் உடைப்பு
சம்பவத்தன்று அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வாலிபரை மும்பை அந்தேரி பகுதிக்கு வரச்சொன்னார். வாலிபரும் திருமண கனவுடன் ஆமதாபாத்தில் இருந்து அந்தேரி வந்தார். அந்தேரி வந்த வாலிபரை ஜெயஸ்ரீ, அவரது அக்காள் ரித்து, அக்காள் கணவர் உள்ளிட்ட 5 பேர் இரும்பு கம்பி, கட்டையால் சரமாரியாக தாக்கினர். தாக்குதலில் வாலிபரின் கால் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து வாலிபர் அந்தேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ, ரித்துவை கைது செய்தனர். மேலும் ரித்துவின் கணவர், அவரது 2 நண்பர்களை தேடி வருகின்றனர்.






