புனே குடோனில் பயங்கர தீ; 12 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

புனே குடோனில் பயங்கர தீ விபத்தில் 12 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புனே,
புனே நகர் வட்காவ் பகுதியில் பழைய பொருட்கள் குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றிய தீ மற்ற இடங்களுக்கு பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களில் தீ பற்றியதால் டமார் டமார் என வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 15 வாகனங்களில் விரைந்து வந்தனர். நாலாபுறமும் சுற்றி நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 வீரர்கள் இணைந்து சுமார் 1 மணி நேரம் போராடி குடோனில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. ஆனால் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமானது. தீ விபத்தில் குடோனில் இருந்த 12 சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






