நிதேஷ் ரானேக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம்

புனேயில் பா.ஜனதா எம்.எல்.ஏ. நிதேஷ் ரானேவக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.
புனே,
பா.ஜனதா எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிதேஷ் ரானே மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி திருநங்கைகள் நேற்று பந்தர்கார்டன் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கை ஒருவர், "நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்களை மோசமாக விமர்சித்துள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நாங்கள் வலியுறுத்தினோம். செவ்வாய்க்கிழமை இரவு முதல் போலீஸ் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினோம். ஆனால் நேற்று எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு பதிலாக போலீசார் எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்" என்றார். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஸ்மார்டனா பாட்டீல் கூறுகையில், "அந்த வழியாக சென்ற மத ஊர்வலத்திற்கு வழிவிடுமாறு போராட்டம் நடத்தியவர்களிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் வழிவிடாததால் அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்திய 20 முதல் 25 பேரில் வெறும் 3 பேர் மட்டுமே திருநங்கைகள் மற்றவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்" என்றார்.






