ஆதித்ய தாக்கரேக்கு எதிராக அவதூறு பரப்பிய பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும்- உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தல்


ஆதித்ய தாக்கரேக்கு எதிராக அவதூறு பரப்பிய பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும்- உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:30+05:30)

திஷா சாலியன் மரணத்தில் ஆதித்ய தாக்கரேக்கு எதிராக அவதூறு பரப்பிய பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

மும்பை,

திஷா சாலியன் மரணத்தில் ஆதித்ய தாக்கரேக்கு எதிராக அவதூறு பரப்பிய பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

திஷா சாலியன் மரணம் விபத்து

நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பலியானார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில் திஷா சாலியன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய மந்திரி நாராயண் ரானே மகன் நிதேஷ் ரானே குற்றம்சாட்டினார். மேலும் அவர் திஷா சாலியன் கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக சட்டசபையில் பேசினார். இதேபோல நாராயண் ரானே, நிதேஷ் ரானே திஷா சாலியன் மரணத்தில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினர்.

இதன் காரணமாக மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் திஷா சாலியன் மரணம் விபத்து என சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

இதையடுத்து திஷா சாலியன் மரணத்தில் ஆதித்ய தாக்கரே மீது குற்றம்சாட்டிய பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "பா.ஜனதா தலைவர்கள் மற்றும் அதன் பெண் தலைவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக ஆதித்ய தாக்கரேவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் ஏன் ஒரு இளம் தலைவரின் பெயரை கெடுக்க முயற்சி செய்தனர்" என்றார்.

இதேபோல அரவிந்த் சாவந்த் எம்.பி. கூறும்போது, "பா.ஜனதாவினர் ஆதித்ய தாக்கரேவின் நற்பெயரை அழிக்க முயற்சி செய்தனர். தற்போது அவர்களின் முகத்தில் அறையப்பட்டுள்ளது." என்றார்.

தேசியவாத காங்கிரஸ்

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. கூறியதாவது:-

மராட்டியத்தில் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை ஒருபோதும் பார்த்தது இல்லை. அவர்கள் ஒரு குடும்பத்தை அழிக்க முயற்சி செய்தனர். இது மராட்டிய கலாசாரத்துக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதித்ய தாக்கரே கூறும்போது, "இந்த கேவலமான அரசியலில் நான் நுழைய விரும்பவில்லை. அந்த சாக்கடையில் நான் விழ விரும்பவில்லை. எனக்கு எதிராக குற்றம்சாட்டியவர்களுக்கு சி.பி.ஐ. அறிக்கை தான் பதில்" என்றார்.

சி.பி.ஐ. அறிக்கை குறித்து பா.ஜனதாவை சேர்ந்த நிதேஷ் ரானே, "திஷா சாலியன் மரணம் தொடர்பான ஆதாரங்களை போலீசார் அழித்துவிட்டனர்" என கூறியுள்ளார்.


Next Story