ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்- மும்பை பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உருக்கம்


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்- மும்பை பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உருக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உருக்கமாக பேசினர்.

மும்பை,

மும்பையில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உருக்கமாக பேசினர்.

இஸ்ரேல் சிறுவன் பேச்சு

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது. உலகையே அதிர வைத்த இந்த பயங்கரவாத தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில் நரிமன் ஹவுசில் நடந்த தாக்குதலில் அப்போது 2 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் மோசே ஹோல்ட்ஸ்பெர்க்கின் தாய், தந்தை சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்த நடந்த பிரார்த்தனையில் சிறுவன் மோசே கதறி அழுதது அங்கு இருந்தவர்களின் இருதயத்தை நொறுக்கி இருந்தது.

இந்தநிலையில் நேற்று மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்பு கமிட்டி சிறப்பு கூட்டத்தில் மோசே ஹோல்ட்ஸ்பெர்க்கின் உரையாடல் பதிவு ஒலிபரப்பட்டது. தற்போது இஸ்ரேல் நாட்டில் பாட்டி, தாத்தாவுடன் உள்ள அவர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஹீப்ரு மொழியில் பேசியிருந்தார்.

கல்லூரி மாணவி

சத்ரபதி சிவாஜி டெர்மினசில் பயங்கரவாதி அஜ்மால் கசாப் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த கல்லூரி மாணவி தேவிகா ரோதாவன் பயங்கரவாதிகளை ஒடுக்க போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினார். மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார். மாணவி தேவிகா ரோதாவன் பயங்கரவாத தாக்குதலின் போது 7 வயது சிறுமியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அஜ்மல் கசாப்புக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளித்து இருந்தார்.

தாஜ் ஓட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடந்த போது பொதுமேலாளராக பணியாற்றிய கரம்பிர் சிங் காங்யும் பேசினார். அவர் தாக்குதலின் போது ஓட்டல் விருந்தினர்களை பாதுகாக்கும் பணியில் இருந்த போது, அவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஜெட்ஏர்வேஸ் முன்னாள் பணிப்பெண் நிதி சப்தேக்கர், போலீஸ்காரர் துக்காராம் ஒம்பலேவின் மனைவி உள்ளிட்டவர்களும் பயங்கரவாதம் குறித்து கூட்டத்தில் உருக்கமாக பேசினர்.

1 More update

Next Story