ரெயில்களை பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டு வெளியே வந்து வழி தெரியாமல் தவித்த சிறுவர்கள் - போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

ரெயில்களை பார்க்கும் ஆசையில் வெளியே வந்து வீடு திரும்ப வழிதெரியாமல் தவித்த சிறுவர்களை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மும்பை,
ரெயில்களை பார்க்கும் ஆசையில் வெளியே வந்து வீடு திரும்ப வழிதெரியாமல் தவித்த சிறுவர்களை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வழி தெரியாமல் தவித்த சிறுவர்கள்
பால்கர் மாவட்டம் பொய்சர் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியான 5 முதல் 7 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு திடீரென ரெயில்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். சிறுவர்கள் முதலில் பொய்சர் ரெயில் நிலையம் சென்றனர். ஆசை தீர அந்த வழியாக சென்ற ரெயில்களை பார்த்து ரசித்தனர். ரெயிலில் சென்றவர்களுக்கு கையசைத்து மகிழ்ந்தனர். வீடு திரும்பும் போது சிறுவர்கள் வழியை மறந்தனர். அவர்கள் தண்டவாளம் வழியாக நடக்க தொடங்கினர். மாலை 6.30 மணியளவில் அசங்காவ் பகுதியில் உள்ள வன்காவ் கிராமத்தில் சென்ற சிறுவர்கள் வீடு திரும்ப வழி தெரியாமல் அழுது கொண்டு இருந்தனர். சிறுவர்களை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக வன்காவ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
போலீசார் சிறுவர்களை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தண்டவாளத்தில் சுமார் 15 கி.மீ.க்கு மேல் நடந்து சோர்வடைந்து இருந்த சிறுவர்களுக்கு உணவு கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். சிறுவர்களிடம் விசாரித்த போது அவர்கள் மும்பை, கணேஷ் நகரை சேர்ந்தவர்கள் என கூறினர். ஆனால் பொய்சர் பகுதியிலும் கணேஷ்நகர் இருப்பதால் சந்தேகமடைந்த போலீசார் சிறுவர்களின் படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பி உதவிகேட்டனர். அப்போது சிறுவர்கள் பொய்சர் பகுதியில் உள்ள கணேஷ்நகரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சிறுவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுவர்களை அவரது பெற்றோர்களிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். சிறுவர்களை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர். சிறுவர்களை மீட்க உதவிய பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த போலீசார், பெற்றோர் பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.






