தேசியவாத காங்கிரஸ் செய்த ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் என்ன ஆனது? - பிரதமர் மோடிக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி

தேசியவாத காங்கிரஸ் செய்த ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் என்ன ஆனது என பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் செய்த ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் என்ன ஆனது என பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
சரத்பவாருக்கு அழைப்பு
மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்து, அஜித்பவார் தலைமையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து உள்ளனர். தேசியவாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்த பா.ஜனதாவை முன்னாள் முதல்-மந்திாி உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே புனேயில் பிரதமர் மோடிக்கு திலகர் தேசிய விருது வழங்கும் விழாவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவருக்கு எதிராக கட்சியை உடைத்து துணை முதல்-மந்திரியான அஜித்பவாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் கோடி ஊழல்
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் ரூ.70 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டதாக கூறிவிட்டு தற்போது அவர்களுடன் கூட்டணியில் சேர்ந்து உள்ள பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே விமர்சித்தார். இது தொடர்பாக மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் என்ன ஆனது?. உங்களுடன் யாரெல்லாம் மேடையில் இருக்க போகிறார்கள்?. தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது உங்களுடன் உள்ளது. அமலாக்கத்துறை போன்ற முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. நேரம் கொடூரமானது. அது அவர்களுக்கு எதிராக திரும்பும் போது, அவர்களுக்கு அது கடினமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






