நடிகை கிரிசனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது ஏன்?

நடிகை கிரிசன் பெரிராவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
நடிகை கிரிசன் பெரிராவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை
மும்பையை சேர்ந்த நடிகை கிரிசன் பெரிரா (வயது27). ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இவரை ரவி போபதே, அந்தோணி பவுல் ஆகிய 2 பேர் சமீபத்தில் சார்ஜா அனுப்பி வைத்தனர். அவரிடம் சிறிய கோப்பை ஒன்றை கொடுத்துவிட்டனர்.
இந்தநிலையில் கிரிசன் சார்ஜா சென்றவுடன் விமான நிலைய அதிகாரிகள் அவர் வைத்திருந்த கோப்பையில் சோதனை நடத்தினர். அப்போது அதில் போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து கிரிசன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். முதலில் அவருக்கு எதுவும் புரியவில்லை. அதன்பிறகு தான் ரபி போபதே, அந்தோணி பவுலால் திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டதை உணர்ந்தார்.
இதுதொடர்பாக நடிகையின் தாய் மும்பை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த ரவி போபதே, அந்தோணி பவுலை கைது செய்தனர். இதைதொடர்ந்து சார்ஜாவில் சிறையில் இருந்த நடிகையும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நாய் தகராறு
இந்தநிலையில் வளர்ப்பு நாய் தகராறு காரணமாக 2 பேரும் திட்டமிட்டு நடிகையை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " நடிகையின் தாய் நாய் ஒன்றை வளர்த்து வந்து இருக்கிறார். அந்த நாய் அந்தோணி பவுலை கடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நடிகையின் தாய்க்கும், அவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் முககவசம் அணிவது தொடர்பாகவும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே நடிகையின் தாயை பழிவாங்க அவர் நடிகையை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து உள்ளார். நடிகை மட்டுமின்றி மேலும் சிலரையும் அவர் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது தெரியவந்தது உள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் " என்றார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகை கிரிசன் சார்ஜாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மும்பை வருவார் என கூறப்படுகிறது.






