ரக்சா பந்தனுக்கு சகோதரி வீட்டிற்கு கணவர் அனுப்ப மறுத்ததால் 6-வது மாடியில் இருந்து குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை - தானேயில் சோகம்
ரக்சா பந்தனுக்கு சகோதரி வீட்டிற்கு கணவர் அனுப்ப மறுத்ததால் 6-வது மாடியில் இருந்து ஒரு வயது மகளுடன் பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
ரக்சா பந்தனுக்கு சகோதரி வீட்டிற்கு கணவர் அனுப்ப மறுத்ததால் 6-வது மாடியில் இருந்து ஒரு வயது மகளுடன் பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரக்சா பந்தன்
தானே கோட்பந்தர் சாலையில் உள்ள ஜோய் ஸ்கவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு துருவி(வயது1) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி ரக்சா பந்தன் தினத்தை யொட்டி சத்தராவில் வசிக்கும் சகோதரி வீட்டிற்கு செல்ல பிரியங்கா முடிவு செய்தார். இதற்காக தனது கணவர் மகேசிடம் அவர் அனுமதி கேட்டு உள்ளார். அப்போது, மகேஷ் குழந்தையுடன் தனியாக நீண்ட தூரம் பயணம் செய்வது கஷ்டமான காரியம் என கூறி சத்தாரா செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் இரவும் இதே பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
மகளுடன் தற்கொலை
இதனால் மன வருத்தம் அடைந்த பிரியங்கா தனது குழந்தையுடன் அறையில் படுக்க சென்றுவிட்டார். இந்தநிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் படுக்கையில் இருந்து எழுந்த பிரியங்கா மகள் துருவியுடன் 6-வது மாடி பால்கனிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து குழந்தையுடன் கீழே குதித்தார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாய், மகள் இருவரையும் கட்டிடத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த காசர்வட்வலி போலீசார் தாய், மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கணவர் மகேசிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சகோதரி வீட்டிற்கு கணவர் அனுப்ப மறுத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரியங்கா மனமுடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.