'லிப்ட்' அறுந்து விழுந்து பெண் பலி

மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பெண் பலியானார்.
மும்பை,
மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பெண் பலியானார்.
லிப்ட்டில் சிக்கிய பெண்
மும்பை சார்க்கோப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவத்தன்று காலை நடைபயிற்சிக்காக 62 வயது பெண் ஒருவர் கீழே செல்ல லிப்டில் ஏறினார். ஆனால் லிப்ட் 4-வது மாடி பகுதியில் நகராமல் நின்று கொண்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த பெண் உதவிகேட்டு சத்தம் போட்டார்.
இதுபற்றி அறிந்த பெண்ணின் மகன் 4-வது மாடியின் லிப்ட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் லிப்ட்டிற்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அறுந்து விழுந்தது
மேலும் கட்டிடத்தின் காவலாளி ஒருவர் பெண்ணை மீட்க லிப்ட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது, லிப்ட் அதிவேகமாக கீழே நகர்ந்து தரை தளத்தில் விழுந்தது. லிப்ட் அறுந்து விழுந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் லிப்ட்டின் உள்ளே சிக்கிய பெண் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சார்க்கோப் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






