ராகுல்காந்தி நடைபயணத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பு

இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி ராகுல்காந்தி நடைபயணத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
மும்பை,
இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி ராகுல்காந்தி நடைபயணத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
73-வது நாள் நடைபயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மராட்டியத்தில் நடைபயணம் நடந்து வருகிறது.
நேற்று 73-வது நாளாக அவரது நடைபயணம் மராட்டியத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் தொடர்ந்தது. அங்குள்ள சேகாவ் கஜானன் ததா பாட்டீல் மார்க்கெட் யார்டில் இருந்து காலை 6 மணிக்கு ராகுல்காந்தி நடக்க தொடங்கினார்.
ஆட்டு குட்டியிடம் பரிவு
அவர் செல்லும் வழியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். திடீரென ஒரு வீட்டு அருகே உள்ள ஆட்டு தொழுவத்துக்குள் நுழைந்த ராகுல்காந்தி, அங்கு நின்ற ஆட்டுக்குட்டியை பரிவுடன் தடவி கொடுத்தார்.
எதிர்பாராத விதமாக ராகுல்காந்தி ஆட்டு தொழுவத்துக்குள் நுழைந்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் திகைப்பு அடைந்தனர். ஆனால் அந்த கிராமமக்கள் ராகுல்காந்தியை வியந்து பார்த்தனர்.
பெண்கள் அதிகளவில் பங்கேற்பு
இதற்கிடையே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாளான நேற்று ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பெண்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காங்கிரஸ் பெண் தொண்டர்கள், மகளிர் அணிகளை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியின் பெண் மக்கள் பிரதிநிதிகள், சுயஉதவி குழுவினர் என ஏராளமான பெண்கள் நடைபயணத்தை அலங்கரித்தனர்.
இரவில் ஜல்காவ் மாவட்டத்தை நடைபயணம் சென்றடைந்தது. இன்றுடன் மராட்டியத்தில் நிறைவு பெறும் அவரது நடைபயணம், இரவில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று பின்னர் அங்கு பயணிக்க உள்ளது.






