இளம்பெண் குத்திக்கொலை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தொடர்பு துண்டிப்பு
மும்பை சாந்தாகுருஸ் வக்கோலாவை சேர்ந்த இளம்பெண் சோபியா சேக்(வயது17). இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அம்பாஜி மோரே(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் வாலிபரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை சோபியா சேக் தவிர்த்து வந்தார். இதனால் சோபியா சேக் மீது வாலிபருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி சோபியா சேக் வீட்டுக்கு அம்பாஜி மோரே சென்றார்.
இளம்பெண் கொலை
அப்போது, வீட்டில் சோபியா சேக் மட்டும் தனியாக இருந்தார். இதையடுத்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டு அம்பாஜி மோரே சோபியா சேக்கிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த அம்பாஜி மோரே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோபியா சேக்கை சரமாரியாக குத்தினார். இதனால் வலி தாங்க முடியாத அவர் சத்தம்போட்டு உள்ளார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அங்கிருந்து தப்பிஓடிய அம்பாஜி மோரேவை மடக்கி பிடித்தனர்.
பின்னர் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று சோபியா சேக்கை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். மேலும் அம்பாஜி மோரேவை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சோபியா சேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயுள் தண்டனை
அங்கு நடத்திய பரிசோதனையில் 22 தடவை கத்தியால் குத்தப்பட்டு இருந்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அம்பாஜி மோரேவை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் 15 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் அம்பாஜி மோரே மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அம்பாஜி மோரேக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






