மாவட்ட செய்திகள்

விசைப்படகு என்ஜின் பழுதானதால் ஒருமாதமாக நடுக்கடலில் தத்தளித்த 6 அந்தமான் மீனவர்கள் + "||" + The boat engine palutanat For a month Andaman sea shipwrecked fishermen

விசைப்படகு என்ஜின் பழுதானதால் ஒருமாதமாக நடுக்கடலில் தத்தளித்த 6 அந்தமான் மீனவர்கள்

விசைப்படகு என்ஜின் பழுதானதால் ஒருமாதமாக நடுக்கடலில் தத்தளித்த 6 அந்தமான் மீனவர்கள்
விசைப்படகு என்ஜின் பழுதடைந்ததால் ஒரு மாதமாக நடுக்கடலில் தத்தளித்த அந்தமான் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை யினர் மீட்டனர். என்ஜின் பழுது அந்தமான் - நிக்கோபர் தீவை சேர்ந்தவர் முகமது நிசார் (வயது 55). இவர் தனது விசைப்படகில் பல்ராம் திர்க்கி (23), ஆனந்த் திர்க்கி (48), உஸ்மான் அலி(45), கிருஷ்ணா நாக் (24) மற்றும் ரவி
காரைக்கால்

விசைப்படகு என்ஜின் பழுதடைந்ததால் ஒரு மாதமாக நடுக்கடலில் தத்தளித்த அந்தமான் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை யினர் மீட்டனர்.

என்ஜின் பழுது

அந்தமான் - நிக்கோபர் தீவை சேர்ந்தவர் முகமது நிசார் (வயது 55). இவர் தனது விசைப்படகில் பல்ராம் திர்க்கி (23), ஆனந்த் திர்க்கி (48), உஸ்மான் அலி(45), கிருஷ்ணா நாக் (24) மற்றும் ரவிராம் (19) ஆகிய 6 மீனவர் களுடன் கடந்த 27.11.2016 அன்று அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றார்.

அந்தமானுக்கு வடக்கில் உள்ள சென்டினல் என்ற தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த டிசம்பர் 2-ந் தேதி அவர்களது படகு என்ஜின் திடீரென்று பழுது ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை.

இந்தநிலையில் அந்தமான் அருகே உருவான ‘நாடா’ புயல் காரணமாக அவர்களது படகு இலங்கையை நோக்கி தள்ளப்பட்டது. இதனால் 6 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

ஒரு மாதம் தத்தளிப்பு

இதற்கிடையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த முகமதுநிசார் உள்பட 6 மீனவர்களின் குடும்பத்தினரும் கவலை அடைந்தனர். இதுகுறித்து அந்தமான் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்களை தேடும் பணி நடைபெற்ற வந்தது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித தகவலும் இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்து வந்த அந்தமான் மீனவர்கள், கடந்த 3-ந் தேதி இலங்கை திரிகோணமலை பகுதியில் படகுடன் கரை ஒதுங்கினர். அவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு விசாரித்தனர்.

படகு பழுதானதால் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் மீனவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்கள்.

மீன் வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு

இதன்பின் நேற்று முன் தினம் அந்தமான் மீனவர்கள் 6 பேரையும் இலங்கை கடற் படையினர் தங்களது ரோந்து படகு மூலம் அழைத்துவந்து சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்தமான் மீனவர்கள் 6 பேர் மற்றும் அவர்களது பழுதடைந்த விசைப்படகுடன் இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ‘ராணி துர்காவதி’ என்ற ரோந்து கப்பல் மூலம் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு காரைக் காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

அவர்களிடம் இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் அனுராக் சவுத்ரி, துணை கமாண்டன்ட் உத்திராபதி வீரமணி ஆகியோர் விசாரித்தனர். பிறகு மீனவர்கள் 6 பேரும் காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குனர் நடேசபிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் பார்த்திபன் அந்தமான் மீனவர்களையும், பழுதடைந்த அவர்களது படகையும் பார்வையிட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்கும்படி அதிகாரிகளிடம் கூறினார். அதன்பேரில் அந்தமான் மீனவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட் களை மீன்வளத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

இதன்பின் 6 மீனவர்களும் அந்தமானில் இருந்து வந்து இருந்த உதவி மீன்வளத்துறை வளர்ச்சி அதிகாரி ஹம்சா, அலுவலர் பஷீர் அகமது ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நடுக்கடலில் ஒரு மாதம் தவித்தது குறித்து படகு உரிமையாளரான முகமது நிசார் நிருபர்களிடம்கூறியதாவது:-

போர்வைகளை பாய்மரமாக...

அந்தமான் அருகே உள்ள சென்டினல் தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது அந்தமான் அருகே உருவான நாடா புயலால் ஏற்பட்ட அலைகளின் வேகத்தில் எங்களது படகு கடலில் தத்தளித்தது.

எங்காவது பாதுகாப்பாக கரை சேர்ந்து விட வேண்டும் என்று கருதி எங்களிடம் இருந்த போர்வைகளை பாய்மரமாக கட்டினோம். அதன் பிறகு காற்றின் திசையில் கடந்த ஜனவரி 3-ந் தேதி இலங்கை திரிகோணமலைக்கு அருகே படகை நங்கூரம் போட்டு நிறுத்தினோம்.

இந்தநிலையில் 5-ந் தேதி வந்த இலங்கை கடற்படையினரிடம் எங்களது நிலைமையை கண்ணீருடன் தெரிவித்தோம். அவர்கள் எங்களது படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு கொண்டு சென்று விசாரித்தனர். உணவு, குடிநீர் வழங்கி உபசரித்தனர். எங்களை கைது செய்யவில்லை. இந்திய கடலோரக் காவல் படையினரிடம் எங்களையும், எங்களது படகையும் அவர்கள் ஒப்படைத்தனர்.

பட்டினி கிடந்தோம்

எங்களது குடும்பத்தை பிரிந்து நீண்ட நாட்களாக கடலில் தவித்துள்ளோம். எனவே, முதலில் அந்தமானுக்கு சென்று குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளோம். அதன் பிறகு வந்து படகு என்ஜின் பழுதை சரிசெய்து அந்தமானுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

சாதாரணமாக மீன்பிடிக்கச் சென்றால் ஒரு வாரத்தில் திரும்பி விடுவோம். அதற்குண்டான உணவுப் பொருட்கள் மட்டுமே படகில் இருக்கும். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக நாங்கள் கடலில் தத்தளிக்க நேரிட்டதால் பல நாட்கள் உணவு இல்லாமல் தவித்தோம். எங்களிடம் இருந்த தண்ணீரை சிறிதளவு குடித்தும், கருவாடுகளை சுட்டுத் தின்றும் உயிர் வாழ்ந்தோம். போதுமான உணவு இல்லாததால் பல நாட்கள் பட்டினி இருந்தோம். நாங்கள் உயிர் பிழைப்போமா? என்று தவித்தநிலையில் எங்களை மீட்ட இலங்கை கடற்படையினர், எங்கள் நாட்டு அதிகாரிகளிடம் சேர்த்த இந்திய கடலோரக் காவல்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.