மாவட்ட செய்திகள்

மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுக்கடை சூறை 15 பேர் மீது வழக்கு + "||" + Unlocked bartender The case was filed against 15 people

மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுக்கடை சூறை 15 பேர் மீது வழக்கு

மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுக்கடை சூறை 15 பேர் மீது வழக்கு
அபிஷேகப்பாக்கம் அருகே மக்கள் எதிர்ப்பையும் மீறி குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடையை ஒரு கும்பல் நேற்று திடீரென சூறையாடியது. இது தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் மெயின் ரோட்டில் இருந்த மதுபானக் கடைகள் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டன. அவ்வாறு அகற்றப்பட்ட மதுக்கடைகளில் ஒரு கடையை தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதியில் திறக்க அந்த கடை உரிமையாளர் ஏற்பாடுகள் செய்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடை திறக்கப்பட்டது.

கடை திறக்கும்போது அப்பகுதி மக்கள் அங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு மதுக்கடை திறக்கப்பட்டது.

சூறையாடப்பட்டது

இந்த நிலையில் நேற்று மாலை அபிஷேகப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் திடீரென அந்த மதுக்கடைக்கு சென்று கடையை சூறையாடினார்கள். கடையையொட்டியுள்ள மதுபானம் அருந்தும் இடமான பாருக்கும் மதுபாட்டில்களை உடைத்து நொறுக்கினார்கள். மேலும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

மேலும் அங்கு காசாளராக பணிபுரிந்து வரும் தானாம்பாளையத்தை சேர்ந்த குமாரை (வயது 49) அந்த கும்பல் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

15 பேர் மீது வழக்கு

இதுகுறித்து புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையைத் தொடர்ந்து அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த விஜயன், நாகையன், பாசமலர், வெண்மணி, கமல்தாஸ், அருமைநாதன் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.