மாவட்ட செய்திகள்

புதுவையில் தொடரும் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சத்துடன் தாய்–மகன்கள் தலைமறைவு + "||" + Fraud continues Conduct Diwali With millions Mother - sons Underground

புதுவையில் தொடரும் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சத்துடன் தாய்–மகன்கள் தலைமறைவு

புதுவையில் தொடரும் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சத்துடன் தாய்–மகன்கள் தலைமறைவு
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சத்துடன் தலைமறைவான தாய்–மகன்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அரியாங்குப்பம்,

புதுவை அரியாங்குப்பத்தில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜோதிடர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்குள் மேலும் ஒரு தொடர் சம்பவமாக அரியாங்குப்பம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த தாய்–மகன்கள் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாயுடன் தலைமறைவாகி விட்டனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;–

புதுவை அரியாங்குப்பம் சுப்பையாநகர் பழைய பூரணாங்குப்பம் வீதியில் வசித்து வருபவர் அல்போன்ஸா பிரான்சுவா (வயது50). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ரூபன்( வயது 29) என்பவர் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.அல்போன்ஸா அந்த பகுதியில் வீட்டுடன் இணைந்த வகையில் மளிகை கடை நடத்தி வந்தார்.

ஊர் ஊராக பணம் வசூல்

பழக்க வழக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த பல ஆண்டுகளாக தீபாவளி சீட்டும் நடத்தி வந்தார். ரூ.250, ரூ.300, ரூ.350 என 3 பிரிவுகளாக மக்களிடம் பணம் பிடித்தம் செய்து தீபாவளி சமயத்தில் இனிப்பு வகைகள், பாத்திரங்கள், பரிசுப்பொருட்கள் என பொது மக்களுக்கு வழங்கி வந்தார். இவருக்கு உதவியாக மகன் ரூபன் வெளியூர்களில் சென்று பணம் வசூல் செய்து கொடுத்தார். இதனால் அக்கம் பக்கத்தினர், மற்றும் உறவினர்கள் மூலம் வீராம்பட்டினம், பாகூர், பண்ருட்டி, கடலூர் என பல்வேறு இடங்களில் இருந்து இவருக்கு வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் இது தீபாவளி மாதம் என்பதால் முதல் வாரத்திலேயே பொருட்கள் வழங்கப்படும் என அனைவரிடமும் தெரிவித்து இருந்தாராம். அதன்படி பொருட்கள் வாங்க சென்றவர்களிடம் தற்போது லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பொருட்கள் வரவில்லை என தட்டிக்கழித்தார்.

தலைமறைவு

கடந்த 10 ந்தேதி நள்ளிரவு அல்போன்ஸா தனது மகன்கள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களுடன் தலைமறைவாகி விட்டார். நேற்று பகலில் பொருட்கள் வாங்க அவரது வீட்டுக்கு சென்றவர்கள் வீடு பூட்டி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து மணவெளி கலைஞர்நகர் வத்சலா, கீழ்பரிக்கல்பட்டு மோகன் உள்பட ஏராளமானோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

அதில் தீபாவளி பண்டிக்காக அல்போன்ஸாவிடம் பணம் செலுத்தி வந்தோம். பணத்தை திருப்பி தராமல் அல்போன்ஸாவும் அவரது மகன்களும் தலைமறைவாகி விட்டார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுக்கொடுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். அவரிடம் 1500க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. போலீசில் புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இவர்களிடம் சுமார் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரித்தனர். அல்போன்ஸாவின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் ஏதும் இல்லை. தலைமறைவான தாய்–மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். தொடரும் சீட்டு பண மோசடி சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.