மாவட்ட செய்திகள்

விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு உதவவேண்டும் நாராயணசாமி வலியுறுத்தல் + "||" + Narayanasamy urges the central government to help airport expansion

விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு உதவவேண்டும் நாராயணசாமி வலியுறுத்தல்

விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு உதவவேண்டும் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு உதவவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு மற்றும் புதுவை மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் முத்ரா சிறப்பு முகாம் புதுவை கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றுப் பேசினார்.

முகாமினை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ கடன்களை வழங்கினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவையில் 266 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் மூலம் இந்த ஆண்டு ரூ.208 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. புதுவையில் கிராமப்புறங்களிலும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 80 சதவீத மக்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர்.

முதியோர், விதவை உதவித்தொகைகளை வங்கிகள் மூலம் வீடுதேடி கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். முத்ரா திட்டத்தின் கீழ் கடந்த 2015–16ல் ரூ.46 ஆயிரம் பேருக்கும், 2016–17ல் 60 ஆயிரம் பேருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்கியுள்ளனர்.

வங்கிகளில் சுயதொழில் தொடங்குவதற்காக கடன் பெறும் சில மகளிர் சுய உதவி குழுவினர் சுயதொழில் தொடங்காமல் கடனாக பெற்ற தொகையை வட்டிக்கு விடுகின்றனர். அவர்கள் கடன்பெறும் தொகையை கொண்டு காய்கறி கடை, பேன்சி ஸ்டோர் தொடங்கலாம். இதனால் நகரப்பகுதிக்கு பெரும்பாலானவர்களின் வருகை குறைந்துவிடும்.

புதுவைக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக கைவினைப்பொருட்களை விற்பனை செய்யலாம். அரசுத்துறை நிறுவனங்கள் மூலம் எல்லாவிதமான பொருட்களையும் அரசே விற்பதால் லாபம் வருவதில்லை. மாறாக நஷ்டம்தான் ஏற்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் வேலைக்கு ஆட்களை வைப்பதற்காக பல நிறுவனங்களை தொடங்கியுள்ளனர்.

பிரான்சில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவர்கள் மற்றும் புதுவை மக்களிடம் இருந்து வங்கிகள் பெருமளவு தொகையை டெபாசிட் ஆக பெறுகின்றன. அதில் 30 சதவீதத்தைத்தான் கடனாக தருகின்றனர். குறைந்தபட்சம் அதில் 60 சதவீதமாவது கடனாக வழங்கவேண்டும். அதேபோல் சமூக பங்களிப்பு திட்டத்திலும் வங்கிகள் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும்.

புதுவையில் இருந்து சமீபத்தில் ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. அது நல்லவிதமாக தொடர்கிறது. புதுவையில் இருந்து திருப்பதி, பெங்களூரு, கோவை, கொச்சிக்கும், முடிந்தால் மும்பைக்கும் விமானப் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 45 சதவீதம் பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு உதவிட வேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

எந்த ஒரு புதிய திட்டமாக இருந்தாலும் அதை புதுச்சேரியில் தொடங்குவதை மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. நாட்டில் படித்த அனைவருக்கும் அரசு வேலை தரமுடியாது. ஆனால் படித்தவர்களை அரசு முதலாளி ஆக்கலாம். ஆனால் புதுவையில் அவ்வாறு செய்யாமல் அனைத்துவிதமான பொருட்களையும் அரசே விற்பனை செய்கிறது.

இதில் அரசால் நடத்தப்படும் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அத்தகைய நிறுவனங்களை மூடிவிட்டு படித்த இளைஞர்களிடம் தொழில் தொடங்கும் பொறுப்பினை ஒப்படைக்கவேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கடன்தர வங்கிகள் முன்வரவேண்டும். அதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். வங்கியில் கடன்பெறுவோரும் அதை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.