புதுவை நாடாளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிப்பு ரங்கசாமி தகவல்


புதுவை நாடாளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிப்பு ரங்கசாமி தகவல்
x
தினத்தந்தி 21 March 2019 10:04 PM GMT (Updated: 21 March 2019 10:04 PM GMT)

புதுவை நாடாளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார் என கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதுவை காமராஜர் சாலையில் உள்ள அண்ணாமலை ஓட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏற்பட்ட சிறு தகவல் இடைவெளி காரணமாக கூட்டணி அமையாமல் போனது. அந்த தேர்தலில் நாம் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் அதிக தொகுதிகளை கைப்பற்றி இருக்கலாம். மக்கள் நம்மை புறக்கணிக்கவில்லை. நாம் தான் ஆட்சியை தவறவிட்டு விட்டோம்.

தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பலமாக தான் உள்ளது. நமது பலத்தை நிரூபிக்கவே இந்த நாடாளுமன்ற தேர்தல் வந்துள்ளது. இந்த முறை வலுவான கூட்டணி அமைந்துள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். இந்த தேர்தல் நாம் புதுவையில் ஆட்சியை பிடிக்க அடித்தளமாக அமையும்.

வேட்பாளர் யார் என்பது முக்கியம் அல்ல. அறிவிக்கும் போது யார் என்பது தெரியும். வேட்பாளரை விரைவில் அறிவிப்போம். யாராக இருந்தாலும் கட்சி தொண்டர்கள் சிறப்பாக களப்பணியாற்ற வேண்டும். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின்போது புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த முறை தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வருவோம்.

நேரு வீதியில் உள்ள கடிகார கடையில் அமர்ந்து கட்சி நடத்துவதாக பலர் சொல்கின்றனர். அங்கு இருக்கும்போது தான் இந்த ஆட்சியின் அவலமே தெரிகிறது. புதுவையில் எப்போதும் இல்லாத மோசமான ஆட்சி இப்போது நடப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். நல்லாட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கான அடித்தளம் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

நமது கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக இருப்பதால் இந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியது அவசியம். பொதுமக்களை வாக்களிக்க தயார்படுத்தும் வகையில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நமது வேட்பாளரை ஆதரித்து புதுவை முழுவதும் பிரசாரம் செய்வேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக செய்ய முடியும் என தொண்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாளை (இன்று) காலையில் அறிவிக்கப்படுவார். உடனே அவர் வேட்புமனு தாக்கல் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் யார்? கூட்டத்தில் புதுவை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் முழுஅதிகாரம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், கோகுலகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜெ. ஜெயபால், சுகுமாறன், கோபிகா, பிரியங்கா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story