மாவட்ட செய்திகள்

புதுவையில் பரபரப்பு:ரங்கசாமி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனைபணம் எதுவும் சிக்கவில்லை + "||" + Rangaswamy's house is a raid of income tax officials No money is lost

புதுவையில் பரபரப்பு:ரங்கசாமி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனைபணம் எதுவும் சிக்கவில்லை

புதுவையில் பரபரப்பு:ரங்கசாமி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனைபணம் எதுவும் சிக்கவில்லை
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை.
புதுச்சேரி, 

புதுவை எம்.பி. தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க 33 பறக்கும் படைகள், 33 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இதையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அதிகாரி தலைமையில் போலீசார் உள்பட தலா 10 பேர் அடங்கிய இருசக்கர வாகன படை ஒன்று அமைக்கப்பட்டது. இவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த அதிரடி சோதனையில் பல இடங்களில் கடத்தல் மது பாட்டில்கள் தான் அதிகம் சிக்கின. மேலும் ஆவணங்கள் இல்லாததால் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வகையில் புதுவை மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.3கோடியே 44 லட்சம் கைப்பற்றப்பட்டது. அதில் ரூ.3 கோடியே 13 லட்சம் திருப்பி தரப்பட்டது.

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் நாராயணசாமி, தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நெடுஞ்செழியன் ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து கடந்த 20 நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்தநிலையில் திலாஸ்பேட்டையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமியின் வீட்டுக்கு நேற்று மதியம் திடீரென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது வீட்டில் ரங்கசாமி இல்லை. இருந்தாலும் வீட்டுக்குள் சென்று அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வீட்டின் தரை தளத்தில் உள்ள 2 அறைகள், சமையல் அறை முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். பின்னர் முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள அறைகளிலும் சோதனை போட்டனர்.

அங்குள்ள ரங்கசாமியின் அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அதிகாரிகள் அங்கு இருந்தவர்களிடம் அந்த அறையின் சாவியை கேட்டனர். அதற்கு அவர்கள் தங்களிடம் அந்த சாவி இல்லை. ரங்கசாமியிடம் தான் உள்ளது. அவர் மதியம் 2½ மணியளவில் வருவார் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது காரில் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் ரங்கசாமி வந்து விட்டாரா? என்று கேட்டனர். அவர் இன்னும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரம் காத்திருந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தி விட்டுச் சென்றனர். இந்த சோதனைகளின் போது ரங்கசாமியின் வீட்டில் பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.