மாவட்ட செய்திகள்

கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு + "||" + Refuse permission for car, lorry and two-wheelers coming from Cuddalore, Villupuram area

கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத கடிப்பட்டு சந்தை செயல்படவில்லை.
திருபுவனை,

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி புதுச்சேரி எல்லை பகுதியான மதகடிப்பட்டு, கோரிமேடு, முள்ளோடை, சோரியாங்குப்பம், காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகள் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டன. இங்கு போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.


வெளிமாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் இந்த வழியாக நுழைய தடை விதித்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். உள்ளூர் வாகனங்களை மருத்துவ குழுவினர் முழு சோதனை செய்து கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கின்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தீவிரமாக தடுக்கும் வகையில் புதுவை மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. நேற்று காலை மதகடிப்பட்டு நுழைவுவாயில் வழியாக விழுப்புரம் பகுதியில் இருந்து ஏராளமான கார், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வந்தன.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி மேற்பார்வையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார், அந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். அப்போது சிலர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து, திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லவேண்டி இருப்பதால், வாகனங்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்றனர். ஆனால் தொழிற்சாலைகள் இயங்காது, எனவே வேலைக்கு செல்லவேண்டாம் என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.

பிளஸ்-2 மாணவர்கள் தவிப்பு

அப்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர் தங்களின் பெற்றோருடன் அங்கு இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். அவர்கள் போலீசாரிடம் தேர்வு எழுத புதுவை மாநில பகுதிக்கு செல்லவேண்டி இருப்பதால், தங்களை மட்டும் அனுமதிக்கவேண்டும் என்று முறையிட்டனர். அவர்களை உரிய விசாரணைக்கு பின் போலீசார் புதுவை பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். மற்றவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

இதேபோல் முள்ளோடை, கோரிமேடு நுழைவு வாயில் பகுதியிலும் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து வந்த கார், லாரி, இருசக்கர வாகனங்களை திருப்பி அனுப்பினர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

வாரச்சந்தை வெறிச்சோடியது

மதகடிப்பட்டு பகுதியில் நுழைவு வாயில் மூடப்பட்டதால், திருபுவனை பகுதியில் செயல்படும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகளுக்கு வடமாநிலங்களில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிவந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையோரம் அணிவகுத்து நின்றன.

செவ்வாய்க்கிழமை தோறும் மதகடிப்பட்டில் வாரச்சந்தை நடைபெறும். இங்கு மாடு, காய்கறி, பழங்கள், விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யப்படும். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்று சந்தை செயல்படவில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பேராசிரியர்களை கைது செய்யக்கோரி தற்கொலை செய்த கல்லூரி மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு
பேராசிரியர்களை கைது செய்யக்கோரி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
2. டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
கெஜ்ரிவால், டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.