மாவட்ட செய்திகள்

தேவை இல்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது ஊரடங்கை மீறினால் ஓராண்டு சிறை முதல்-அமைச்சர் அறிவிப்பு + "||" + No one can come out without a curfew First-Ministerial Notice

தேவை இல்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது ஊரடங்கை மீறினால் ஓராண்டு சிறை முதல்-அமைச்சர் அறிவிப்பு

தேவை இல்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது ஊரடங்கை மீறினால் ஓராண்டு சிறை முதல்-அமைச்சர் அறிவிப்பு
பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது. ஊரடங்கை மீறுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 22-ந்தேதி மக்கள் சுய ஊரடங்கு இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. புதுவையிலும் இந்த ஊரடங்கு நடந்தது. மேலும் அன்றைய தினம் இரவு 9 மணிமுதல் 144 தடை உத்தரவும் அமலுக்கு வந்தது. ஆனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் அவர்களை கட்டுப் படுத்துவது போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது.


இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. ஆனாலும் காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருகிறோம் என்ற போர்வையில் நகரப் பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் நடமாடினார்கள். அவர்களை தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வைத்திருந்த தடுப்புகளையும் மீறி பொதுமக்கள் சென்றதால் பரபரப்பு நிலவியது.

உலகையே உலுக்குகிறது

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம் தொடர்பாக சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள், அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக 4 பிராந்தியங்களிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று என்பது உலகையே உலுக்கி வருகிறது. இத்தாலியில் நேற்று முன்தினம் 900 பேர் இறந்துள்ளனர். நேற்று 700 பேர் இறந்துள்ளனர். சீனாவில் ராணுவத்தைக்கொண்டு மக்களை தனிமைப்படுத்தியதால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியே வரக்கூடாது

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நமக்கும் பக்கத்து மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. புதுவை மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் தொற்றுபற்றியோ, உயிரைப்பற்றியோ மக்கள் கவலைப் படவில்லை. இந்த தொற்று ஒருவருக்கு வந்தால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு 4 பிராந்திய மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மக்கள் வெளியில் அதிகமாக நடமாடினால் இந்த தொற்று பரவும். எனவே மிகவும் விழிப்புணர்ச்சியோடு இருக்கவேண்டிய நேரம் இது. கிராமப்புற மக்கள் நகரத்தை நோக்கி வருவதால் கூட்டம் அதிகமாகிறது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வரக் கூடாது. முழுமையாக அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். அதேபோல் குழந்தைகளும் வீட்டில்தான் இருக்கவேண்டும்.

ஒரு ஆண்டு சிறை தண்டனை

அத்தியாவசிய பொருட் களை வாங்க வருகிறோம் என்று நிறையபேர் வருகிறார்கள். எல்லைப்பகுதிகளில் காவல்துறையோடு சண்டை போடுகிறார்கள். தேவையில்லாமல் தகராறு செய்கிறார்கள். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே 31-ந்தேதி வரை மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மக்களின் நடமாட்டம் குறித்து அமைச்சர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். தினந்தோறும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

துணை ராணுவம்

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் கடந்த 22-ந்தேதி இருந்ததுபோல் வீட்டிற்குள் இருக்கவேண்டும். பொருட்கள் வாங்க வந்தேன் என்று வெளியே எங்கேயும் செல்லக்கூடாது. பாதுகாப்பு பணியில் ஐ.ஆர்.பி. போலீசாரையும் ஈடுபடுத்த உள்ளோம். தேவைப்பட்டால் துணை ராணுவப் படையையும் அழைப்போம். ஊரடங்கு உத்தரவினை கடுமையாக நிறைவேற்றுவோம்.

புதுவை அரசு பல் மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 700 படுக்கை வசதியையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். இல்லாவிட்டால் சீல் வைக்கப்படும். உத்தரவினை மீறி யாராவது வெளியே வந்தால் சிறை வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கூட்டத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, ஜான் குமார், அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், சிவா, வெங்கடேசன், என்.எஸ்.ஜெ.ஜெயபால், சாமிநாதன், சங்கர், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், செயலாளர்கள் அன்பரசு, பிரசாந்த்குமார் பாண்டா, கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தடை காலத்தில் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிப்பு
தமிழகத்தில் தடை காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
2. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. நாளை முதல் 31-ந்தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். தேவையில்லாமல் பொதுமக்கள் கூட்டம் சேர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.
5. அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.