பருவம் தவறிய மழையால் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை + "||" + Farmers suffer over 4,000 acres of paddy fields due to unseasonal rains
பருவம் தவறிய மழையால் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை
பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பாகூர்,
புதுவை மாநிலத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட நிவர், புரெவி புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள், விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஜனவரி மாதத்தில் குளிர் காலம் தொடங்க வேண்டிய சமயத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
விவசாயிகள் வேதனை
புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் பொன்னி, பி.பி.டி. ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பல இடங்களில் முன்பருவ அறுவடைக்கு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தயாராக இருக்கின்றன.
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டன. மேலும் ஈரப்பதம் அதிகமாக இருந்து வருவதால் நிலத்தில் விழுந்த நெற்கதிர்கள் அனைத்தும் முளைத்து விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. அந்த கூற்றுக்கு எதிராக தற்போது விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதை கண்டு மனம் தாங்க முடியாமல் விளைநிலத்திற்கு செல்வதை தவிர்க்கின்றனர். நீரில் மூழ்கி நெற்கதிர்கள் முளைத்து விட்டதால் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதேபோல் மணிலா, காய்கறி பயிர்களிலும் மழைநீர் தேங்கியுள்ளன.
நிவாரணம்
இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில் பாகூர், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம், சேலியமேடு, அரங்கனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம், கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை, வில்லியனூர், கோர்க்காடு ஆகிய பகுதிகளில் அறுவடை செய்ய தயாராக இருந்த 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன.
காரைக்கால் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் நெற்கதிர் முளைத்துள்ளன.
தமிழகத்தில் பேரிடர் இழப்பாக கூறி ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இன்சூரன்ஸ் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறக் கூட யாரும் வரவில்லை என்றார்.
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.