மாவட்ட செய்திகள்

புதிய பஸ் நிலையம் ரூ.200 கோடியில் நவீனப்படுத்தப்படும்நாராயணசாமி உறுதி + "||" + New bus station It will be modernized at a cost of Rs 200 crore Narayanasamy confirmed

புதிய பஸ் நிலையம் ரூ.200 கோடியில் நவீனப்படுத்தப்படும்நாராயணசாமி உறுதி

புதிய பஸ் நிலையம் ரூ.200 கோடியில் நவீனப்படுத்தப்படும்நாராயணசாமி உறுதி
புதுவை புதிய பஸ்நிலையம் ரூ.200 கோடியில் நவீனப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி, 

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடலை சிறு விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் பணி ரூ.12 கோடியே 19 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த விளையாட்டு அரங்கமானது 14 ஆயிரத்து 495 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அம்சங்களுடன் அமைய உள்ளது.

இங்கு 350 இருசக்கர வாகன நிறுத்துமிடம், தரைதளத்தில் வணிக கடைகள், முதல் தளத்தில் கழிப்பிட வசதியுடன் கூடிய 280 விளையாட்டு வீரர்கள் தங்கக்கூடிய 14 தங்கும் கூடம் மற்றும் 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய பார்வையாளர் மாடம் ஆகியவை அமைய உள்ளன.

விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்காக 200 மீட்டர் ஓடுபாதை, கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து, பெத்தாங் ஆகிய ஆடுகளம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைய உள்ளன.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பணிகளுக்கான கல்வெட்டை தொடங்கி வைத்தார். தற்போது அங்கு கடை வைத்துள்ளவர்களுக்கு கடைகள் வழங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் சேதராப்பட்டில் ஒரு நகரத்தை உருவாக்க ரங்கசாமி திட்டம் தீட்டினார். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் நானும், அமைச்சர் நமச்சிவாயமும் அப்போது ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த வெங்கையா நாயுடுவை சந்தித்து இந்த திட்டத்துக்கு அனுமதி பெற்றோம்.

எங்களது முயற்சியினால் ரூ.1,850 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கிடைத்தது. இந்த திட்டத்தின்கீழ் நகரப் பகுதியில் பேட்டரி கார்கள் இயக்கம், மின்சார கேபிள்கள், போக்குவரத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அண்ணா திடலை மேம்படுத்த சிவா எம்.எல்.ஏ. தொடர்ந்து வலியுறுத்தினார். சின்னவாய்க்காலின் இருபுறமும் கடைகள் கட்டி கழிவுநீர் சீராக செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. திடீர் நகரில் 200 அடுக்குமாடி வீடுகள் கட்ட உள்ளோம். இதற்கு வெகு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.

புதுவை புதிய பஸ் நிலையத்தை நவீனப்படுத்த உள்ளோம். ரூ.200 கோடியில் அனைத்து வசதிகளும் கொண்டதாக மாற்றப்படும். பெரிய மார்க்கெட்டை நவீனப்படுத்த உள்ளோம். நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க உள்ளோம். சோலைநகர் முதல் சின்னவீராம்பட்டினம் வரை கடலோரத்தில் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்படும்.

வ.உ.சி., கலவைக்கல்லூரி பள்ளிகளை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது 7 பணிகளுக்கான வேலை நடக்கிறது. 29 திட்டங்களுக்கு வேலை தொடங்க உள்ளது. 11 பணிகளுக்கு டெண்டர் விடப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அரசு செயலாளர் அன்பரசு, ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், இணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், கண்காணிப்பு பொறியாளர் பெட்ரோ குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.