காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இந்த அரசுக்கு காங்கிரஸ் 15, தி.மு.க. 3, சுயேட்சை 1 என 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்து வந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பாரதீய ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், மற்றும் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதனால், நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. கவர்னர் மாளிகைக்கு சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் 22 ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி, நாளை புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ லக்ஷ்மிநாராயணன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த நிலையில், திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரை சந்தித்து, வெங்கடேசன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால், புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 12 ஆக குறைந்தது