பட்ஜெட்

ரூ.10,100 கோடிக்கு பட்ஜெட் தயாரிப்பு + "||" + Budget product for Rs 10,100 crore

ரூ.10,100 கோடிக்கு பட்ஜெட் தயாரிப்பு

ரூ.10,100 கோடிக்கு பட்ஜெட் தயாரிப்பு
புதுச்சேரி பட்ஜெட்டை ரூ.10,100 கோடியாக அதிகரித்து மறுமதிப்பீடு செய்து மத்திய அரசின் அனுமதிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பட்ஜெட்டை ரூ.10,100 கோடியாக அதிகரித்து மறுமதிப்பீடு செய்து மத்திய அரசின் அனுமதிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் புதுவைக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தயாரிப்பு
இதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர்கள் பதவியேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதற்கு முன் ரூ.9 ஆயிரத்து 250 கோடிக்கு மதிப்பீடு செய்து பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அமைச்சர்கள் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி பதவியேற்றனர். தற்போது புதுச்சேரி அரசு சார்பில் முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை தலா ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கான பட்டியலில் 10 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பட்ஜெட் மறுமதிப்பீடு
மேலும் சென்டாக் உதவித்தொகை, ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி, அரசு துறைகளில் மின்துறைக்கு செலுத்த வேண்டிய பாக்கி, பொது நிறுவன ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காரணம் காட்டி பட்ஜெட் தொகையை உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில அரசின் வருவாயை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் பட்ஜெட்டை மறு மதிப்பீடு செய்து மத்திய அரசிடனம் தொகையை அதிகரித்து கேட்பது என முடிவு செய்யப்பட்டது.
ரூ.10,100 கோடிக்கு பட்ஜெட்
அதன் அடிப்படையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோப்பை திருத்தி அமைத்து பட்ஜெட் தொகையை ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு அதிகரித்து புதிதாக கோப்பு தயாரிக்கப்பட்டது. 
இந்த தொகைக்கு அனுமதி கோரி கவர்னர் மூலமாக மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மதிப்பீட்டை மத்திய அரசு ஆய்வு செய்து அனுமதி வழங்குவதை பொறுத்து புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி இறுதி செய்யப்படும். அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.