சிறப்புக் கட்டுரைகள்

நாட்டிலேயே தென் மண்டல எம்.எல்.ஏக்களின் வருமானம் அதிகம்; ஆண்டுக்கு ரூ.51.99 லட்சம் + "||" + Income of South Zone MLAs in the country is high;Rs 51.99 lakh annually Information in the study

நாட்டிலேயே தென் மண்டல எம்.எல்.ஏக்களின் வருமானம் அதிகம்; ஆண்டுக்கு ரூ.51.99 லட்சம்

நாட்டிலேயே தென் மண்டல எம்.எல்.ஏக்களின் வருமானம் அதிகம்; ஆண்டுக்கு ரூ.51.99 லட்சம்
தென் மண்டலத்தை சேர்ந்த 711 எம்எல்ஏகளின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த 614 எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் உள்ளது.
சென்னை

பட்டதாரி எம்.எல்.ஏ.க்களை விட 5 முதல் 8-வது வகுப்பு வரை கூட படிக்காத எம்.எல்.ஏ.க்களின் வருமானம் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏக்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. இது தவிர பிசினஸ் செய்தும் வருமானம் ஈட்டுகின்றனர். பலர் கல்வி தந்தைகளாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் நாடுமுழுவதும் உள்ள எம்.எல்.ஏக்களின்  ஆண்டு சராசரி வருமானம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான சீரமைப்பு அமைப்பு எனும் தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மொத்தம் உள்ள 4086 எம்.எல்.ஏ.க்களில் 3145 பேர் வேட்புமனுத் தாக்கலின் போது  பிரமாண பத்திரங்களை வழங்கி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக, இந்த எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை அந்த அமைப்புகள் வெளியிட்டு உள்ளது. தற்போது பதவியில் இருக்கும் 4,086 எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப்பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 941 எம்.எல்.ஏக்கள் தங்களின் வருமானத்தை பற்றிய தகவல்களை குறிப்பிடவில்லை.

இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கணக்கிடப்பட்ட நிலையில், கர்நாடகா எம்.எல்.ஏக்களின் வருவாய் மட்டும் 4 மடங்கு அதிகரித்து ரூ.1.10 கோடியாக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் கர்நாடக மாநில எம்.எல்.ஏ.க்களுக்குத்தான். 203 எம்.எல்.ஏ.க்கள் சராசரியாக ரூ.1.11 கோடி வருவாய் ஈட்டுகின்றனர். குறைந்தபட்சமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் 63 எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுக்கு ரூ.5.4 லட்சம் மட்டுமே சம்பாதிக்கின்றனர். ஜார்க்கண்டின் 72 பேருக்கு தலா ரூ.7.4 லட்சமாக உள்ளது. மகாராஷ்டிராவில் சராசரியாக ரூ.43.4 லட்சம் சம்பாதிக்கின்றனர்.

தென் மண்டலத்தை சேர்ந்த 711 எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த 614 எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் உள்ளது.எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 1052 பேர் 5 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதியை கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.31.03 லட்சமாக உள்ளது.

வெறும் 8-ஆம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள 139 எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.89.88 லட்சம் சம்பாதிக்கின்றனர். பட்டதாரி மற்றும் கூடுதல் தகுதியை பெற்றிருக்கும் 1997 எம்.எல்.ஏ.க்கள் ரூ.20.87 லட்சம் சம்பாதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

397 பேர் விவசாயத்தின் மூலம் தங்களுக்கு வருமானம் கிடைப்பதாக கூறியுள்ளனர். ஒரு சதவிகித எம்எல்ஏக்கள் சினிமாவில் நடிப்பதன் மூலமும், பிசினஸ் செய்வதன் மூலமும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். சிலரோ இல்லத்தரசிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் உள்ளனர்.

தகவல் அளித்தவர்களில் 2 சதவீதத்தினர் (55 பேர்) தங்களது தொழில் குறித்து தகவல் அளிக்கவில்லை. 25 சதவீதத்தினர் வியாபாரம் என்றும், 24 சதவீதத்தினர் விவசாயம் அல்லது விவசாயி எனவும் குறிப்பிட்டு உள்ளனர். பண்ணை சார்ந்த தொழில் என குறிப்பிட்ட 13 சதவீதம் பேரின் சராசரி ரூ57.81 லட்சம். ரியல் எஸ்டேட் தொழில் குறிப்பிட்டவர்கள் 1 சதவீதம். ஆனால் வருமானம் ரூ.39.69 லட்சம் மற்றும் ரூ28.48 லட்சம் எனக் கூறியுள்ளனர். கல்வித் தகுதியை பொருத்தமட்டில் 33 சதவீதம் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

அவர்களது வருமானம் ரூ.31.03 லட்சம். 63 சதவீதம் பட்டதாரிகள் அல்லது அதைவிட அதிகம் படித்துள்ளனர். ஆனால் வருமானம் ரூ.20.87 என குறிப்பிட்டு உள்ளனர். 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன் எனக் கூறியுள்ள 139 பேரின் வருமானம் தலா ரூ.89.88 லட்சமாக உள்ளது. வயது 25 முதல் 50 என குறிப்பிட்ட 1,402 எம்எல்ஏக்கள் ரூ.18.25 லட்சமும், 51 முதல் 80 வரையுள்ள 1,727 பேரின் வருமானம் ரூ.29.32 லட்சமாகவும் உள்ளது. 11 எம்எல்ஏக்களின் வயது 81 முதல் 90 வரை உள்ளது. இவர்கள் சராசரியாக ரூ.87.71 லட்சம் வருவாய் பார்க்கின்றனர். 90 வயதைக் கடந்த 2 பேர் ரூ.60.91 லட்சம் ஈட்டுகிறார்கள்.

மொத்த எம்.எல்.ஏக்களில் 258 பேர் பெண்கள். சராசரியாக ஆண் எம்.எல்.ஏக்கள் வருமனம் ரூ.25.85 மற்றும் பெண் எம்.எல்.ஏக்கள் வருமானம் ரூ.10.53 லட்சமாக உள்ளது என கூறப்பட்டு உள்ளது.