உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 30 Sep 2018 11:58 AM GMT (Updated: 30 Sep 2018 11:58 AM GMT)

அவளுக்கு வயது 30. பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். அவளது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, நோய்வாய்ப் பட்டு படுக்கையில் காலத்தை கழிப்பவர்.

தம்பி, இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டான். உணவுக்கே வழி இல்லாத நிலை ஏற்பட்டதால் தாய், அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை பார்க்கச் சென்றார். அவளும் துணிக் கடை ஒன்றிற்கு வேலைக்கு போனாள். இரண்டு பேரும் வேலை பார்த்தும் குடும்பத்தில் பட்டினிதான். அவர்கள் உழைத்து சம்பாதிப்பது படுக்கையில் கிடப்பவரின் மருத்துவ செலவுக்கே விரயமாகிக் கொண்டிருந்தது.

கணவரின் உடல்நிலையை பற்றிய கவலையைவிட, மகளுக்கு திருமணமாகாத ஏக்கமே தாயிடம் அதிகம் இருந்தது. அவள் சுமாரான அழகு கொண்டவள். ஆனால் கம்மலைத் தவிர வேறு எந்த தங்க நகையும் இல்லாதவள். பணமோ, சீர்வரிசையோ கிடைக்காது என்பதால் அவளை திருமணம் செய்துகொள்ள யாருமே முன்வரவில்லை.

அவள் வேலை பார்க்கும் துணிக்கடையின் முதலாளி வேறு மாநிலத்தை சேர்ந்தவர். அவரது கலாசார மரபுகளும் வேறு. அந்த முதலாளியின் உறவுப் பெண்மணி ஒருவர், அவளது தாயாரை அணுகினார். அந்த பெண்மணியின் மகன் போதுமான மனவளர்ச்சியில்லாதவன். வயதும் நாற்பதைக் கடந்தவன். ‘எனது மகனை பார்த்தால் மனவளர்ச்சி குறைந்தவன்போல் தெரியாது. சில நேரங்களில் மட்டுமே அவன் குழந்தைத்தனமாக நடந்துகொள்வான். நாங்கள் எப்போதும் உடனிருந்து அவனை கவனித்துக்கொள்கிறோம். எங்களுக்கு அதிக பண வசதி இருக்கிறது. நீங்களும், உங்கள் மகளும், படுக்கையில் கிடக்கும் நோயாளியோடு ரொம்பவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மகனை உங்கள் மகள் திருமணம் செய்துகொண்டால், உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே நான் தத்தெடுத்து உங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொள்வேன்’ என்றார். குறிப்பாக அவருக்கு பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.

பலவிதங்களில் அந்த பெண்மணி ஆசை காட்டியபோதும், அவளது தாயார் மசியவில்லை. ‘எந்த குறையும் இல்லாத ஏழை வாலிபன் யாராவது என் மகளை திருமணம் செய்ய முன்வருவான். பணத்துக்கு ஆசைப்பட்டு என் மகளை பாழுங்கிணற்றில் கொண்டுபோய் தள்ள முடியாது’ என்றுகூறி, அந்த பெண்மணியை திருப்பி அனுப்பிவைத்துவிட்டார்.

மகள் வந்ததும், தாய் விஷயத்தை சொன்னார். ‘திருமணத்திற்கு சம்மதிக்காததால், கடையில் உனக்கு வேறு விதத்தில் நெருக்கடி தருவார்கள். அதனால் வேலையில் இருந்து நின்றுவிடு’ என்றார். ஆனால் அவளோ தந்தையின் உடல்நிலை, தாயின் வயோதிகம் போன்றவை களை கருத்தில்கொண்டு அதிரடியாக திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாள். ‘நீங்கள் மீதி காலத்தை நிம்மதியாக கழிக்க நான் எவ்வளவு பெரிய சோகத்தை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று கூறியவள், தானே நேரடியாக சென்று அந்த பெண்மணியை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

சந்தோஷ செய்தியை கேட்டு அந்த பெண்மணி மகிழ்ந்தாள். சிம்பிளாக திருமணத்தை நடத்தி னால் ேபாதும் என்று அவசர அவசரமாக ஏற்பாடு செய்தாள்.

அந்த பெண்மணியின் சமூகத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் திருமண ஏற்பாடுகள் நடப்பதை ரகசியமாக தெரிந்துகொண்டு கொதித்துப்போனார். மூளைவளர்ச்சி குறைந்த அந்த நடுத்தர வயதுக்காரருக்கு, அந்த பெரியவர் தனது மகளை ஏற்கனவே திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். அந்த நபர் மணவாழ்க்கை நடத்துவதற்குரிய எந்த தன்மையும் இல்லாதவர் என்ற உண்மை தெரிந்ததும், திருமணமான பத்து நாளிலே அவள் தாய்வீடு திரும்பிவிட்டாள். இந்த உண்மையை, திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அந்த பெண் ணிடம் அவர் கண்ணீர் மல்க சொன்னார். ‘எக்காரணத்தைக் கொண்டும் அவனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்காதே. உன் வாழ்க்கை நாசமாகிவிடும்’ என்று எச்சரித்தார்.

உடனே அவள் அவரது கையை பற்றிப் பிடித்துக்கொண்டு, ‘என் வாழ்க்கை எப்படி ஆனாலும் பரவாயில்லை. என் பெற்றோர் நிம்மதியாக வாழ பணம் தேவை. அதற்காகத் தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். நீங்கள், என் எதிர்கால கணவரை பற்றிய எந்த உண்மையையும் என் தாயாரிடம் கூறவேண்டாம். என் வாழ்க்கையில் எது நடந்தாலும் நடந்துவிட்டுபோகட்டும்’ என்று உருக்கமாக சொன்னாள். அவர், அவளது விதியை நொந்தபடி திரும்பிவிட்டார்.

திட்டமிட்டபடி அடுத்த ஒருசில வாரங்களில் அந்த நபருக்கும், அவளுக்கும் திருமணம் நடந்துவிட்டது. அந்த பெரியவர் சொன்னதுபோல்தான் ‘புதுமாப்பிள்ளை’ நடந்துகொள்கிறார். எப்போதும் சாப்பிடு கிறார். இரவில் தனிமையில் குறட்டைவிட்டு தூங்குகிறார். உடல் சுத்தத்தை ேபணு வதில்லை. சரியாக உடையும் அணிவதில்லை. அவரை வீட்டிற்குள்ளே முடக்கிவைத்திருக்கிறார் கள். அவரை பற்றிய தகவல் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக மனைவியான அவளையும் வெளியே அனுப்புவதில்லை. அவள், அந்த நபரை உடனிருந்து கவனிக்கும் வேலைக்காரியாக்கப்பட்டிருக்கிறாள். அவளது பெற்றோரு க்கு மட்டும் போதுமான அளவு பணத்தை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘என் கணவர் ரொம்ப நல்லவர்.. வல்லவர்.. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பெற்றோரிடம் அவ்வப்போது போனில் சிரித்து பேசிக்கொண்டு அவள் மனதுக்குள் அழுதுகொண்டிருக்கிறாள்.

- உஷாரு வரும். 

Next Story