நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் தனியார் பங்கு முதலீடு 2,370 கோடி டாலர்


நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் தனியார் பங்கு முதலீடு 2,370 கோடி டாலர்
x
தினத்தந்தி 3 Oct 2018 10:49 AM IST (Updated: 3 Oct 2018 10:49 AM IST)
t-max-icont-min-icon

நம் நாட்டில், நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) 2,370 கோடி டாலர் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது, 2017 முழு ஆண்டில் ஈர்க்கப்பட்ட முதலீட்டைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால முதலீடு

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.

நம் நாட்டில், செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில், 2,370 கோடி டாலர் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மட்டும் 154 ஒப்பந்தங்கள் வாயிலாக 920 கோடி டாலர் முதலீடு பெறப்பட்டு இருக்கிறது. அந்த காலாண்டில், முதலீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பு 59 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் 580 கோடி டாலர் மதிப்பில் 146 ஒப்பந்தங்கள் நிறைவேறி இருந்தன.

முந்தைய காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 191 ஒப்பந்தங்கள் மூலம் 830 கோடி டாலர் அளவிற்கு தனியார் பங்கு முதலீடு இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் காலாண்டில் முதலீடு 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவு தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மால்கள் எனப்படும் வணிக வளாகங்களில் இவ்வகை முதலீடு அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு 10,000 கோடி டாலரை எட்டும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். வளர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் பங்குகளை பொதுவாக ஒரு துணிகர முதலீட்டாளர் வாங்குகிறார்.

புதிய பங்கு வெளியீடு

ஓரளவு வளர்ச்சி கண்ட பின் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு நல்ல லாபத்துடன் வெளியேறுகின்றன.
1 More update

Next Story