‘நாசா’வின் அசாத்திய பயணங்களும்... சில ஆச்சரியங்களும்...!


‘நாசா’வின் அசாத்திய பயணங்களும்... சில ஆச்சரியங்களும்...!
x
தினத்தந்தி 9 Oct 2018 6:13 AM GMT (Updated: 9 Oct 2018 6:13 AM GMT)

நாசா என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன் (NASA-நாசா) 1958-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நிலவில் மனிதர்களை இறங்க வைத்தது, செவ்வாயில் விண்கலம்-ரோபோவை தரை இறக்கியது, சூரிய குடும்ப கோள்கள் ஒவ்வொன்றிற்கும் செயற்கைகோள் அனுப்பியது உள்ளிட்ட அதன் சாதனைகள் விண்வெளி ஆய்வின் மைல் கற்களாகும். தற்போது 60 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சியை நிறைவு செய்திருக்கும் நாசாவை பற்றிய ஆச்சரியமான சுவாரசியங்கள் சிலவற்றை அறிவோம்....

* வேற்றுக்கிரகவாசிகளின் ஆபத்திலிருந்து பூமியை பாதுகாக்கும் முழுநேரப் பணிக்காக தனிப்பதவி நாசாவில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ‘பிளானட்ரி புரொடக்சன் ஆபீசர்’ எனும் உயர் பதவியும், அதற்கான குழுவும் 1967-லேயே உருவாக்கப்பட்டுவிட்டது. இதுவரை ஏலியன்களைப் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பணிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரம் டாலர் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது என்பது போனஸ் தகவல்.

* 1960-களில் நாசா விண்வெளி மையம் பெண்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல தயங்கியது. மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களுக்கு மரணம் நேரலாம் அல்லது கருவிகளை இயக்க முடியாத நிலை ஏற்படலாம் என அஞ்சியது. 1972-ல் பெண்களுக்கு சம உரிமை என்ற காங்கிரஸ் மசோதாவின் அடிப்படையில்தான், நாசா அமைப்பில் பெண்கள் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. 1978-ல் முதன் முதலில் 6 பெண்கள் விண்வெளி வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஒருமுறை நாசாவின், சர்வதேச விண்வெளி மைய பயணத்திற்கான தகவல் திரட்டு ஒன்றை சரிபார்த்து வழங்குவதற்காக இங்கிலாந்தின் மாணவர் குழுவிடம் வழங்கப்பட்டிருந்தது. அப்போது 17 வயது மாணவரான மைல்ஸ் சாலமோன் என்பவர் நாசாவின் ஆய்வுக் கட்டுரையில் இருந்த தவறு ஒன்றை கண்டுபிடித்துக் கூறினார். அதில் ‘கதிர்வீச்சு அளவீடு’ ஒன்று தவறாக இருப்பது பற்றி நாசாவின் இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் அதை சரிபார்த்தபோது அது உண்மை என்று தெரியவந்தது. பின்னர் அந்த மாணவரை தங்கள் தரவுகளை சரிபார்க்கும் பணியில் சேர்்த்துக் கொண்டனர். அதன்பிறகு ஏராளமான தரவுகளை சரிபார்த்து ஆய்வுக்கு உதவி முழுநேர ஆய்வாளராக மாறிவிட்டான் என்பது வேறுகதை.

* அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் ஏராளமான மண்-கல் மாதிரிகளை நிலவில் இருந்து எடுத்து வந்தனர். அவர்கள் கொண்டு வந்ததில் 17 பவுண்டு அளவுள்ள நிலவுப் பாறைகளை ராபர்ட் என்பவர் திருடிவிட்டார். அதை இணையதளத்தில் ஏலம்விட்டபோது எப்.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவன் அளித்த வாக்குமூலம் அனைவரையும் உறையச் செய்துவிட்டது. “தனது பெண் தோழியை கவர்வதற்காக அதை திருடியதாகவும், அதைக் கொடுத்த பிறகு தோழி தன்னையே தந்துவிட்டதாகவும், பின்னர் விற்க முற்பட்டபோது பிடிபட்டதாகவும்” அவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

* வியாழன் கிரகத்தையும் அதன் நிலவுகளையும் முதன் முதலில் படம் பிடித்து அனுப்பியது நாசாவின் ஜூனோ விண்கலம்தான். அதுவும் கடந்த 2016-ம் ஆண்டுதான் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து மிகத்துல்லியமான படங்களை அனுப்பியது. ஆனால் விஞ்ஞானி கலீலிேயா 1610-லேயே வியாழன் கிரகத்தை தொலைநோக்கி மூலம் பார்த்து கூறிவிட்டார். ஆனால் அதற்கு 400 ஆண்டுகள் பின்புதான் ஜீனோ அங்கே சென்று படம் பிடித்துள்ளது. அத்துடன் கலீலியோவை பெருமைப்படுத்தும் விதமாக வியாழன் கிரகத்தை கையில் தாங்கிய கலீலியோ பொம்மை உருவம் அலுமினியத்தில் உருவாக்கப்பட்டு வியாழன் கோளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* செவ்வாய் கிரகத்தில் புள்ளிகளும், கோடுகளும் கொண்ட அமைப்புகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இவை “ேமார்ஸ் கோடு” என்று அழைக்கப்படுகிறது. 2016-ல் இது படம் பிடிக்கப்பட்டது. மணல் மேடுகள் தோற்றுவிக்கும் வடிவம் என்று தெரியவந்துள்ளது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதில் ஒரு வேடிக்கையான தகவல் அடங்கியிருப்பதாக கருதுகிறார்கள். அதாவது அந்த குறிகளை ஆங்கில வடிவமாக்கினால் “NEE NED ZB 6TNN DEIBEDH SIEFI EBEEE SSIEI ESEE SEEE” என்று எழுத முடிவதாக சொல்கிறார்கள். இந்த வார்த்தைகளுக்கு உலக மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பொருள் இருக்கலாம் என்ற கோணத்தில் இந்த ேமார்ஸ் கோடு ஆய்வு செய்யப்படுகிறது. உங்களுக்கு ஏதேனும் அர்த்தம் புரிந்தால் நீங்களும் கண்டுபிடிப்பாளராகிவிடலாம்...

* நாசா ஆய்வு மையம் இதுவரை இணையதளத்தில் மக்களின் பொது பயன்பாட்டிற்காக 30 லட்சம் செயற்கைகோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை டெர்ரா விண்கலத்தால் எடுக்கப்பட்டவை. இது 1999 முதல் விண்வெளியில் மிதந்தபடி புகைப்படங்கள் எடுத்து வருகிறது.

* சூரிய குடும்பத்தின் பல்வேறு இடங்களுக்கும் நாம் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை விளக்கும் பல்வேறு போஸ்டர்களை நாசா விளம்பரம் செய்து வெளியிட்டு வருகிறது. இளைய தலைமுறையினரிடம் விண்வெளி பயணம் குறித்த உத்வேகத்தை உருவாக்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

Next Story