மரபணுக்களுக்கு இடையில் ஒளிந்திருக்கும் வைரசும், போதைப் பழக்கமும்


மரபணுக்களுக்கு இடையில் ஒளிந்திருக்கும் வைரசும், போதைப் பழக்கமும்
x
தினத்தந்தி 9 Oct 2018 7:31 AM GMT (Updated: 9 Oct 2018 7:31 AM GMT)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். நாம் விரும்புகிற ஒரு செயலை மீண்டும், மீண்டும் செய்யும்போது அது ஒரு பழக்கமாகிறது.

ஆனால் இந்த பழமொழியானது நற்பழக்கங்கள், தீய பழக்கங்கள் என இரண்டுக்கும் பொதுவானது.

ஆக, நம்முடைய பழக்கங்கள் நமக்கு நன்மை செய்கிற வகையில் இருத்தல் நல்லது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பழக்கங்களில் ஒரு அடிப்படைச் சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், நம்மை அடிமைப்படுத்தும் ஆற்றல் நம் பழக்கங்களுக்கு உண்டு. அதன் விளைவாக, ஆங்கிலத்தில் ‘அடிக்சன்’ (addiction) என்று கூறப்படும் ‘பழக்க அடிமைத்தனம்’ அல்லது ‘பழக்கப்பற்று’ எனும் ஆபத்தான வாழ்க்கைமுறை உருவாகிறது.

இந்த பழக்க அடிமைத்தனத்துக்கு உதாரணமாக, குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் சொல்லலாம். ஆனால் இவ்விரண்டையும் விட மிகவும் ஆபத்தான மற்றொரு பழக்கமும் இருக்கிறது. அதுதான் போதை மருந்துகளுக்கு அடிமையாகி, தொடர்ந்து பல்வேறு வகையான போதை மருந்துகளை உடலுக்குள் செலுத்திக்கொண்டே இருக்கத் தூண்டும் போதைப்பழக்கம்.

விஞ்ஞானமும், மருத்துவமும் என்னதான் அசுர வளர்ச்சி கண்டிருந்தாலும் இன்றுவரையில் போதைப்பழக்கத்துக்கான அறிவியல் காரணங்களும், அதற்கான முழுமையான சிகிச்சையும் கண்டறியப்படவேயில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுக்குழு ஒன்று, நம் மரபணுக்களுக்கு இடையில் ஒளிந்திருக்கும் ‘ரெட்ரோ வைரஸ் (retrovirus) எனும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த, ‘ஹியூமன் என்டோஜீனியஸ் ரெட்ரோவைரஸ் டைப் கே’ (Human Endogenous Retrovirus Type K (HML-2) அல்லது HK2) எனப்படும் வைரஸ், மனிதர்களுடைய போதை பழக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக் கூடிய வாய்ப்பு அதிகமாக மனிதர்களின் உடலிலுள்ள உயிரணுக்களில், போதைப்பழக்கத்துடன் தொடர்புடைய மூளை ரசாயன வினைகளுக்கு காரணமான ‘டோப்பமின்’ செயல்பாடுகளை கட்டுப்பாடுத்தும் மரபணுக்களுக்கு இடையில் HK2 வைரஸ் இருந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தம் மரபுக்கோப்பில் HK2 வைரஸ் கொண்ட மனிதர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் என்றும் இந்த ஆய்வில் கூறப்படுகிறது. முக்கியமாக, இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆபத்தான மனித வைரஸ்களில் HK2 மூன்றாவது இடம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மிகவும் துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய மரபணுக்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும் மரபுக்கோப்பு (genome), ஆதிகால நுண்ணுயிர் எலும்புக்கூடுகளின் மயானம் போன்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், நம் மரபுக்கோப்பில் உள்ள மரபணுக்களுக்கு இடையிடையில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களின் மரபணுக்களை கலந்துள்ளன என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நம் மரபணுக்கள் இரட்டிப்பு அடையும்போது, கூடவே நமக்கு தேவையே இல்லாத நுண்ணுயிர்களின் மரபணுக்களும் இரட்டிப்பு அடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நம் மரபணுக்களுக்கு இடையில் ஒளிர்ந்திருக்கும் வைரஸ்களில் பெரும்பாலானவை ஆபத்து ஏதும் இல்லாதவை என்றாலும் கூட, அவற்றுள் சில ஆபத்தானவையாகக் கூட இருக்கலாம். உதாரணமாக, நம் மரபணுக்களுக்கு இடையில் வாழும் பல்வேறு ரெட்ரோ வைரஸ்களில், HK2 வைரஸ் முழுமையான செயல்பாடு கொண்டதாகவும், அதனால், கிருமித்தொற்று ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வகையான HK2 வைரஸ்களில் உலகில் 5 முதல் 10 சதவீதம் மக்கள்தொகையில் உள்ள HK2 வைரஸ் RASGRF2 எனும் புரதத்தை உற்பத்தி செய்யும் இரண்டு மரபணுக்களுக்கு மத்தியில் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. RASGRF2 புரதத்தின் வேலை என்னவென்றால், நரம்புகளை தூண்டிவிடும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களில் (Neurotransmitters) ஒன்றான டோப்பமினை (Dopamine) சுரக்கச் செய்வதுதான். முக்கியமாக, குடிப்பழக்கம் கொண்ட இளைஞர்களின் உடலில் RASGRF2 மரபணுவானது மரபணு மாற்றத்துக்கு உள்ளாகி மாறி இருப்பதும், எலிகள் மீதான ஒரு ஆய்வில் அதே மாறிய மரபணு குடிப்பழக்கத்தினால் ஏற்படும் போதைக்கும் காரணமாக இருந்ததும் இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், இங்கிலாந்தில் கல்லீரலைத் தாக்கும் ஹெப்படைட்டீஸ்-C வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுத்தகவல்கள் கொண்ட தரவுத்தளம் மற்றும் கிரேக்க நாட்டில் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுத்தகவல்கள் கொண்ட தரவுத்தளம் ஆகிய இரண்டிலும் நாள்பட்ட மருந்து பயன்பாடுடன் தொடர்புடைய RASGRF2 மரபணு மாற்றம் எத்தனை விழுக்காடு உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில், நாள்பட்ட மருந்து பயன்பாடுடன் தொடர்புடைய RASGRF2 மரபணு மாற்றமானது ஹெப்படைட்டீஸ்-C மக்கள் குழுவில் சுமார் 3.6 மடங்கு அதிகமாகவும், எச்.ஐ.வி. மக்கள் குழுவில் சுமார் 2 மடங்கு அதிகமாகவும் இருந்தது தெரியவந்தது.

ஆக மொத்தத்தில், இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நம் மரபணுக்களை இடையில் ஒளிந்திருக்கும் மற்றும் ஆபத்து இல்லாதது என்று இதுவரை கருதப்பட்டு வந்த ரெட்ரோ வைரஸ்களினால், பல மனிதர்களுக்கு போதைப்பழக்கம் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட சர்வதேச ஆய்வுக்குழுவினர் கருதுகிறார்கள்.

Next Story