மறுசுழற்சி உணவகம்


மறுசுழற்சி உணவகம்
x
தினத்தந்தி 12 Oct 2018 12:16 PM GMT (Updated: 12 Oct 2018 12:16 PM GMT)

இந்தோனேஷியாவின் செமராங் பகுதியில் அசாதாரணமான இடத்தில் இயங்கிவருகிறது ஓர் உணவகம். இந்தப் பகுதியில் ஒரு மாதத்துக்கு 1,600 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் மூன்று வேளை உணவின்றி பசியால் வாடுகின்றனர். இவர்களின் பசியைப் போக்குவதற்காகவே சார்மின்னும், அவரது மனைவி சுயட்மியும் இந்த உணவகத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

உணவகம் அமைந்திருப்பது மலைபோல் குவிந்திருக்கும் குப்பைக் கிடங்குக்கு அருகில். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக், கண்ணாடி, காகிதம் போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைச் சேகரித்து, இவர்களிடம் கொடுக்க வேண்டும். அந்தக் குப்பையின் அளவுக்கு ஏற்ப விலை மதிப்பு அளவிடப்படும். அந்த மதிப்புக்கு ஏற்ற வகையில் விரும்பிய உணவைச் சாப்பிடலாம். மீதிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள்.

‘‘பிளாஸ்டிக் கழிவுகளால் நிலமும் இயற்கை வளங்களும் பாழாகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் நூறு ஆண்டுகள் ஆனாலும் மட்கப் போவதில்லை. பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால் மறுசுழற்சி செய்து பயன்பாட்டை ஓரளவிற்கு குறைக்க முடியும். செமராங் பகுதி மக்கள் பசியால் வாடுவதை அறிந்துகொண்டு, இந்த திட்டத்தை அமல்படுத்தினோம். அவரவர் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கணக்கிட்டுச் சொல்லிவிடுவோம். எங்கள் உணவகத்தில் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய்வரை பல்வேறு விதமான உணவுகள் கிடைக்கின்றன. சாப்பிட்டது போக, மீதிப் பணத்தையும் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் பசியைப் போக்கி வறுமையின் கொடுமையைக் குறைத்திருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கும் உதவி வருகிறோம். குப்பைகளிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயு மூலம் உணவகத்துக்கு எரிபொருள் கிடைத்து விடுகிறது. கழிவையும் பயன்தரக்கூடிய வகையில் மாற்றமுடியும் என்ற சிந்தனை மக்களிடம் வரவேண்டும். அப்படி வந்தால் சுற்றுச்சூழல் மாசுவும் குறையும். எங்கள் உணவகம் வந்தபிறகே சுவையான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக மக்கள் சொல்லும்போது மனம் நிறைகிறது’’ என்கிறார் சார்மின்.


Next Story