ஏழ்மையை துரத்துகிறார்.. ஏராளமான பதக்கங்களை குவிக்கிறார்..


ஏழ்மையை துரத்துகிறார்.. ஏராளமான பதக்கங்களை குவிக்கிறார்..
x
தினத்தந்தி 14 Oct 2018 8:33 AM GMT (Updated: 14 Oct 2018 8:33 AM GMT)

வறுமையை பின்னணியாக கொண்ட மாணவிகள் தடையின்றி படிப்பை தொடர்வது சிரமமான விஷயமாக இருக்கிறது. அவர்கள் விரும்பியபடி உயர்கல்வியை தொடருவதற்கு குடும்ப பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை.

பெரும்பாலானவர்கள் கஷ்டப்பட்டாலும் ஆண் பிள்ளைகளை படிக்க வைப்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெண் பிள்ளைகள் விஷயத்தில் அப்படி நடப்பதில்லை. குடும்ப சூழலுக்கு மத்தியில் படிப்பை தொடர்வதற்கு விளையாட்டுதான் பல மாணவிகளுக்கு உற்ற துணைவனாக அமைந்திருக்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவிகளின் படிப்பு செலவுகளை கல்வி நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதால் குடும்பத்தினருக்கு சிரமம் கொடுக்காமல் படிப்பிலும், விளையாட்டிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவிகளுள் சவுந்தர்யாவும் ஒருவர்.

இவர் ஆக்கி விளையாட்டில் கோல் கீப்பராக சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பதக்கங்களையும் குவித்திருக்கிறார். 10-ம் வகுப்பில் 406 மதிப்பெண்களும், பிளஸ்-2 வில் 1029 மதிப்பெண்களும் எடுத்து படிப்பிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். தற்போது சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து படிப்பை தொடர் வதற்கும் விளையாட்டுதான் காரணமாக அமைந்திருக்கிறது. சென்னையில்தான் ஆக்கி விளையாட்டுக்கான அத்தனை வசதி வாய்ப்புகளும் அமைந்திருப்பதாக கூறுகிறார். தனது திறமையை மெருகேற்றி இந்திய ஆக்கி அணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதுதான் சவுந்தர்யாவின் லட்சியமாக இருக்கிறது.

இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ராக்கியா பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தாயார் கவிதா, பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணி புரிந்து வருகிறார். தந்தை பாலசுப்பிரமணியமும் டெய்லர்தான். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். சவுந்தர்யாவின் சகோதரர் கிரிநாத், 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கணவரின் வருமானம் தடைப்பட்டு போனதால் கவிதா, இரு குழந்தைகளையும் படிக்க வைக்க சிரமப்பட்டு வருகிறார். சவுந்தர்யாவின் விளையாட்டு ஆர்வமும், அதனால் அவருடைய படிப்பு செலவு குறைந்திருப்பதும்தான் கவிதாவுக்கு ஒரே ஆறுதலாக அமைந்திருக்கிறது. குடும்ப சூழலை உணர்ந்து சவுந்தர்யாவும் கஷ்டங்களுக்கு மத்தியில் விளையாட்டிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்.

‘‘எனது தாயும், தந்தையும் ஆரம்பத்தில் பனியன் கம்பெனியில் துணிகளை ஆர்டர் எடுத்து தைத்து கொடுக்கும் தொழில் செய்தார்கள். திடீரென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட தொடங்கியது. பூர்வீக சொத்துகளை விற்பனை செய்து கடனை அடைத்தார்கள். அதன்பிறகு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவையும், எங்களது படிப்பு செலவையும் சமாளிக்கும் நிலைமை ஏற்பட்டது. நான் 2-ம் வகுப்பு படிக்கும்போதே ஆஸ்டலில் சேர்ந்து விட்டேன். 6-ம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு விளையாட்டு மீது ஈடுபாடு ஏற்படவில்லை. நான் உயரமாக இருப்பதால் விளையாட்டு ஆசிரியர் என்னை நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்க வைத்தார். அவர் கொடுத்த பயிற்சி விளையாட்டு மீது ஆர்வம் கொள்ள செய்தது. பள்ளிகள் அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றேன். சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் ‘வேர்ல்டு லீடர்ஸ்’ தேர்விலும் வெற்றி பெற்றேன். அதனால் பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று பரிசுகளையும், பலருடைய பாராட்டையும் பெற்றேன்’’ என்பவர் ஆக்கி விளையாட்டில் கால் பதிக்கவும் அவருடைய திறமையும், உயரமும் காரணமாக அமைந்திருக்கிறது.

‘‘பள்ளிகள் அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது செஞ்சூரி பவுண்டேசன் பள்ளியின் பயிற்சியாளர் என்னிடம், ‘நீ உயரமாக இருக்கிறாய். ஆக்கி விளையாட்டு உனக்கு பொருத்தமாக இருக்கும். உன்னை கோல் கீப்பராக்குவதற்கு பயிற்சி அளிக்கிறேன்’ என்றார். அப்போது நான் வேறு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். நான் தடகள வீராங்கனையாக இருப்பதால் அந்த பள்ளிக்கு சென்றால் கல்வி கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்றார்கள். அப்போது என்னையும், என் தம்பியையும் படிக்க வைப்பதற்கு பெற்றோர் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். நல்ல படிப்பும், விளையாட்டு பயிற்சியும் அங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அந்த பள்ளியில் சேர்ந்து ஆக்கி விளையாட்டுக்கு என்னை தயார் படுத்திக்கொண்டேன்’’ என்பவரின் உயரம் 5.9 அடி.

சவுந்தர்யா நீளம் தாண்டுதலை போல ஆக்கியிலும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க சென்றபோதுதான் ஆக்கி விளையாட்டிற்கு ஏற்ற கட்டமைப்புகள் நகர்ப்பகுதியில் சிறப்பாக இருப்பதை அறிந்திருக்கிறார். தன்னை சிறந்த கோல் கீப்பராக மேம்படுத்திக்கொள்ள பள்ளிப்படிப்பை முடித்ததும் நகர்ப்பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறார்.

‘‘நாங்கள் மண் தரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கி ஆடுகளத்தில்தான் விளையாடி பயிற்சி பெற்றிருந்தோம். வெளிமாநிலங்களில் விளையாட செல்லும்போது அங்கு தரைத்தளம் மண் பரப்பாக அல்லாமல் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மண் தளத்தைவிட அதில் பந்து வேகமாக உருண்டோடியது. அதனால் கோல் கீப்பர் பணி சவாலானதாக அமைந்துவிட்டது. நிறைய பேர் கோல் கீப்பர் பணி எளிதானது, சிரமப்பட வேண்டியிருக்காது என்பார்கள். ஆனால் அதுதான் கடினமான பணி. அனைத்து வீரர்களும் கடுமையாக போராடி தடுத்த பிறகும் அவர்களை கடந்து பந்து என்னை நோக்கி வரும்போது தனி ஒருத்தியாக போராட வேண்டியிருக்கும். சிறிது கவனம் சிதறினாலும் அது எதிர் அணிக்கு சாதகமாக மாறிவிடும். துரிதமாகவும், புத்தி கூர்மையுடனும் செயல்பட்டு தடுப்பாட்டம் ஆட வேண்டும். போட்டி பகல் பொழுதில் நடக்கும்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக கை, கால்களில் அணிந்திருக்கும் கோல் கீப்பிங் உபகரணங்கள் எல்லாம் சூடாகிவிடும். அப்போது சிரமத்துடன் விளையாட வேண்டியிருக்கும்’’ என்கிற சவுந்தர்யாவுக்கு சொந்தமாக கோல் கீப்பிங் உபகரணங்கள் இல்லை. விளையாட செல்லும்போதெல்லாம் மற்ற வீரர்களிடம் கடன் வாங்கி அதனை அணிந்துதான் தனது அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

‘‘கோல் கீப்பர்கள் பயன்படுத்தும் முழுமையான பாதுகாப்பு கவசம் வாங்குவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும். குறைந்தபட்ச உபகரணங்களுடன் கூடிய கவசம் வாங்குவதாக இருந்தாலும் 18 ஆயிரம் செலவாகும். அதனை இன்றுவரை என்னால் வாங்க முடியவில்லை. எனது பயிற்சியாளர்கள் பால சுப்பிரமணியம், ஜெகதீஷ் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தி எனக்கு பயிற்சி அளித்தார்கள். பள்ளி நிர்வாகம் மூலம் பண உதவிபெற்று கோல் கீப்பிங் உபகரணங்கள் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதால் மீண்டும் உபகரணங்கள் இல்லாமல் போய்விட்டது. தற்போது அணிக்கு ஒரே ஒரு உபகரணம் இருக்கிறது. அதைக்கொண்டு இரண்டு, மூன்று பேர் பயிற்சி பெறுகிறோம். எனக்கென்று சொந்தமாக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி விளையாட முடியும்.

பயிற்சி பெறும்போதும், விளையாட செல்லும்போதும் கடன் வாங்கி உபகரணங்கள் அணிவதை நினைத்து பார்த்தாலே மனதுக்கு கஷ்டமாக இருக்கும். எப்படியாவது கஷ்டப்பட்டு சொந்தமாக கோல் கீப்பிங் உபகரணம் வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். இப்போது சென்னையில் தங்கி படிப்பதால் கல்வி கட்டணம் தவிர இதர செலவுகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. எனது தாயாரின் மாத வருமானம் மூன்று ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய்க்குள்தான் இருக்கிறது. நான் ஆஸ்டலில் தங்கி படிப்பதால் சாப்பாட்டுக்கு மட்டும்தான் பணம் கட்ட வேண்டியிருக்கும்.

எனது தந்தை இருந்தவரை ஓரளவு செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்தோம். நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அந்த சோகம் எங்களை நிலைகுலைய வைத்து விட்டது. விளையாட்டு இட ஒதுக்கீட்டில் நான் படிப்பதால் என் படிப்பு செலவுக்கு கஷ்டமில்லாமல் இருக்கிறது. என் தம்பியையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பதுதான் அவனுடைய விருப்பமாக இருக்கிறது.

நான் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கி இருந்தாலும் ஆக்கி விளையாட்டின் மீதே ஆர்வம் கொண்டிருந்ததால் அதில் சாதிக்கவே ஆசைப்படுகிறேன். இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும். அதற்கு தயார்படுத்தவே படிப்பையும், விளையாட்டு களத்தையும் சென்னையில் தேர்வு செய்திருக்கிறேன். இங்குதான் நல்ல பயிற்சி பெற முடியும். சிறப்பாக மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

மற்ற விளையாட்டுகளை ஒப்பிடும்போது இங்கு ஆக்கி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லாத நிலை இருக்கிறது. ஆக்கியில் சிறந்த பெண் கோல் கீப்பர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. அந்த நிலையும் மாற வேண்டும். பெண்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தும் பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். தேவையற்ற சிந்தனைக்கும், செயலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். பெண் குழந்தையை இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் படிக்க வைக்க வேண்டுமா? என்று என் அம்மா ஒருபோதும் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் என்னை இவ்வளவு தூரம் அனுப்பி இருக்க மாட்டார்கள். விளையாட்டு எப்போதும் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் ஏற்படுத்திக்கொடுக்கும்’’ என்கிறார்.

ஏழையாக இருந்தாலும் சவுந்தர்யா ஏராளமான பதக்கங்களை வென்று தலை நிமிர்ந்து நிற்கிறார்!

Next Story