மல்யுத்தத்திற்காக ஒரு தியாகம்


மல்யுத்தத்திற்காக ஒரு தியாகம்
x
தினத்தந்தி 14 Oct 2018 8:58 AM GMT (Updated: 14 Oct 2018 8:58 AM GMT)

மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்குவதற்காக, தான் பார்த்து வந்த அரசு வேலையை ராஜினாமா செய்திருக்கிறார், ரமேஷ் ராவத்.

நொய்டாவை சேர்ந்த இவர் சுங்கத்துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். சிறு வயது முதலே மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் ரமேஷ் ராவத்துக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் குடும்பத்தினரின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் விளையாட்டு ஆர்வத்தை கைவிட்டு படித்து நல்ல வேலையில் சேர்ந்துவிட்டார்.

இவருடைய மகள்கள் இருவரும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். மூத்த மகள் மான்சி, மாநில குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார். சமீபத்தில் நடந்த தேசிய இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். ஆனால் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.

மகள் முறையாக பயிற்சிக்கு செல்ல முடியாமல் போவதுதான் போட்டியில் பின் தங்குவதற்கு காரணம் என்பதை ரமேஷ் புரிந்து கொண்டார். மகள்களை உடன் இருந்து ஊக்கப்படுத்துவதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டார். மல்யுத்த போட்டியை தழுவி எடுக்கப்பட்ட தங்கல் திரைப்படம்தான் தன்னை இந்த முடிவு எடுக்க வைத்தது என்கிறார்.

தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து மகள்களை பயிற்சிக்கு தயார்படுத்தி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து ஆரம்பகட்ட வார்ம் அப் பயிற்சிகளை தானும் மேற்கொள்கிறார். தந்தை உடன் இருந்து பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துவது இரு மகள்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

‘‘நான் பயிற்சி பெறுவதற்காக டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. எனது சகோதரியும் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். இப்போது தந்தையும் எங்களுடன் சேர்ந்திருப்பது மனதுக்கும், உடலுக்கும் உற்சாகம் அளிக்கிறது. பயிற்சி முடிந்து திரும்பி வந்ததும் மாலையில் தந்தையுடன் சேர்ந்து ஒன்றாக உடற்பயிற்சி செய்கிறோம். எங்கள் இருவரையும் விட தந்தை கடினமாக உழைக்கிறார்’’ என்கிறார், மான்சி.

மான்சியின் சகோதரி 12-ம் வகுப்பு படிக்கிறார். அவர் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார். மகள் களின் பயிற்சிக்கு தாயாரும் உறுதுணையாக இருந்து வருகிறார். அவர் மகள்களுக்கு நல்ல பயிற்சி கிடைப்பதற்காக தன்னுடைய நகையையும் அடமானம் வைத்து இருக்கிறார்.

‘‘மகளின் பயிற்சியை விட நகை முக்கியமானது அல்ல. நொய்டாவில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை. டெல்லிக்கு சென்று தான் பயிற்சி பெற வேண்டியிருக்கிறது. அதற்கான பயிற்சி கட்டணம், போக்குவரத்து செலவுகளுக்கு அதிக பணம் செல வழிக்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார், ரமேஷ்.


Next Story