சுற்றுச்சூழல் ‘அம்மா’


சுற்றுச்சூழல் ‘அம்மா’
x
தினத்தந்தி 14 Oct 2018 9:28 AM GMT (Updated: 14 Oct 2018 9:28 AM GMT)

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.

நிறைய பேர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதிலும் விழிப்புடன் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தாய்மார்களுள் ஒருவர் அனாமிகா. மும்பையை சேர்ந்த இவர், தன் மகன் பிறந்தது முதல் பிளாஸ்டிக் பொருட்கள் எதையும் உபயோகப்படுத்தாமல் கவனமாக பராமரித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மகனுக்கு 4 வயது ஆகிறது.

‘‘எனக்கு இயற்கையை நேசிப்பது ரொம்ப பிடிக்கும். அதனால் பல ஆண்டுகளாகவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறேன். என் மகன் பிறந்ததும் அவன் மூலம் தீவிரமாக நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டேன். என் மகனுக்கு எந்த வடிவிலும் பிளாஸ்டிக் பொருட்களை நான் கொடுப்பதில்லை.

காலையில் எழுந்ததும் பிளாஸ்டிக் டூத் பிரஷ்சில் பல் துலக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் மூங்கில் பிரஷ் வாங்கிக் கொடுத்தேன். என் மகனும் அதில்தான் பல் துலக்க பழகிக் கொண்டிருக்கிறான். வெளி இடங்களில் எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கடையில் பிளாஸ்டிக் பை வாங்குவதில்லை. இரண்டு, மூன்று பைகளை எப்போதும் உடன் வைத்திருப்பேன். பிளாஸ்டிக் பாட்டில்களும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் 20 சதவீதம் பிளாஸ்டிக் பாட்டில்களை மட்டும்தான் மறு சுழற்சி செய்ய முடியும். 80 சதவீத பாட்டில்கள் மண்ணோடு கலந்து நீரையும், நிலத்தையும் மாசுபடுத்திக்கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக் ஸ்டிராக்களும் அப்படித்தான்’’ என்கிற அனாமிகா சுற்றுச்சூழலுடன் இணைந்தவாறே வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை ஊக்குவிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். அதற்காக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது அலுவலகத்தையும் மூங்கில்களால் கட்டமைத்திருக்கிறார், இந்த சுற்றுச்சூழல் அம்மா!.

Next Story