வலியில்லா அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் மார்ட்டின்


வலியில்லா அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் மார்ட்டின்
x
தினத்தந்தி 16 Oct 2018 7:08 AM GMT (Updated: 16 Oct 2018 7:08 AM GMT)

வலியில்லா அறுவை சிகிச்சைக்கு முதன் முதலில் வித்திட்டவர் டபிள்யூ.ஜி.மார்ட்டின்.

இன்று (அக்டோபர் 16-ந்தேதி) உலக மயக்கவியல் தினம்

அறுவை சிகிச்சை என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவதும், நாம் மிகவும் பயப்படுவதும் வலியை பற்றித்தான். வலியில்லா அறுவை சிகிச்சைக்கு முதன் முதலில் வித்திட்டவர் டபிள்யூ.ஜி.மார்ட்டின். இவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர். 1846-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி மாஸாசேட் ஜெனரல் ஆஸ்பத்திரியில் எட்வர்ட் கில்பர்ட் என்ற நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்த கட்டியை அகற்ற ஈதர் என்ற மயக்க மருந்தை முதன் முதலில் பயன்படுத்தி நோயாளியை மயக்க நிலைக்கு உட்படுத்தி அறுவை சிகிச்சையை வலி இல்லாமல் செய்து காட்டினார்.அதற்கு முன்பெல்லாம் அறுவை சிகிச்சைக்கு வலி தெரியாமல் இருக்க நோயாளிக்கு அதிக அளவில் மது அருந்த செய்து அவர்களை மயக்க நிலையில் வைத்திருப்பர். அந்த நோயாளி மயக்கம் தெளிவதற்குள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆபரேஷனை செய்து முடிப்பர். அந்த நிலையை முற்றிலும் மாற்றி மருந்து மூலம் மயக்கம் செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று உலகிற்கு மார்ட்டின் நிரூபித்து காட்டிய அக்டோபர் 16-ந் தேதியை உலக மயக்கவியல் தினமாக நாம் கடைபிடிக்கிறோம். அறுவை சிகிச்சையின் போது பொதுவாக மூன்று வகையான முறைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.

முதல் வகையில் ‘ஸ்பைனல் அனேத்சியா’ எனப்படும் முதுகு தண்டில் ஊசி குத்தி மூளை தண்டு வட திரவத்தில் மயக்க மருந்து செலுத்துவது. அடிவயிறு, தொடை மற்றும் கால் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை வலியின்றி மேற் கொள்ள இம்முறை உதவுகிறது. 2-வது முறை நரம்பு செயலிழப்பு முறை அதாவது அறுவை சிகிச்சை செய்ய போகும் பாகத்திற்கான வலி உணர்வை உண்டாக்கும் நரம்புகளை மட்டும் மரத்து போக செய்தல். பெரும்பாலும் தோள்பட்டை மற்றும் கைகளுக்கான அறுவை சிகிச்சைகள் இம் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகையில் நரம்பு செயலிழக்க இப்போதெல்லாமல் அல்ரா சவுண்டு ஸ்கேன் கருவியினை உபயோகப்படுத்தி மிகவும் துல்லியமாக தேவைப்பட்ட நரம்புகளில் மட்டும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. மேற்கூறிய இரண்டு முறைகளிலும் நோயாளி சுயநினைவுடன் இருப்பார். 3-வது முறை நாம் அனைவரும் யூகித்து வைத்துள்ள மயக்க முறை அதாவது முழுமயக்கம் கொடுத்தல்.இம்முறையில் தலை, கழுத்து மற்றும் பெரிய நீண்ட நேர அறுவை சிகிச்சைகள் மற்றும் லேப்ராஸ்கோப் எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை ஆகியவை வலியின்றி சாத்தியப்படுத்திய முறை இதுவாகும்.இம்முறையில் அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு குரல்வளையில் குழாயிட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைக்கு பின்பும் செயற்கை சுவாசம் தொடரப்படும். இந்த முறையில் நோயாளிக்கு சுயநினைவு இருக்காது. மயக்க மருத்துவத்தில் பொதுவாக மக்கள் பயப்படும் விஷயம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பதாகும்.அவ்வாறு பயப்பட தேவையில்லை. ஏனென்றால் மயக்க மருத்துவர் உங்கள் அருகிலேயே இருந்து உங்கள் மருந்தின் அளவு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இன்ன பிற உயிர் அளவீடுகளை விழிப்புடனும், ஜாக்கிரதையாகவும் ஒவ்வொரு நொடியும் கவனித்துக் கொண்டிருப்பர். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தி அறுவை சிகிச்சைக்கு சில நாட்களுக்கு முன்பே இன்சுலின் ஊசிக்கு மாற்ற வேண்டியது இருக்கும். அதைப்போல ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் அதனை அறுவை சிகிச்சை நாள் அன்று வரை தொடர வேண்டிய இருக்கும். பொதுவாக டாக்டர் கள் கூறும் அறிவுரைகளை அப்படியே பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும்.

-டாக்டர் ஜெ.எட்வர்ட் ஜான்சன்,
தமிழ்நாடு மயக்கவியல் டாக்டர்கள் சங்க தலைவர்

Next Story