நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி - கீரை சாகுபடியில் 27 வருட அனுபவம்


நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி - கீரை சாகுபடியில் 27 வருட அனுபவம்
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM GMT (Updated: 19 Oct 2018 1:43 AM GMT)

“கீரை சாகுபடி மூலம்தான் இயற்கை விவசாயத்தை எளிமையாகவும், வேகமாகவும் கற்றுக்கொடுக்க முடியும்” என அழுத்தமாக கூறுகிறார், முன்னோடி இயற்கை விவசாயி தங்கவேல்.

“கீரை சாகுபடி மூலம்தான் இயற்கை விவசாயத்தை எளிமையாகவும், வேகமாகவும் கற்றுக்கொடுக்க முடியும்” என அழுத்தமாக கூறுகிறார், முன்னோடி இயற்கை விவசாயி தங்கவேல். 27 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் கீரை சாகுபடியில் சிறப்பான அனுபவங்களை பெற்றவர். தான் இயற்கை விவசாயம் செய்வதோடு மட்டுமின்றி, பள்ளி மாணவர்களுக்கும், தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள அத்தப்பகவுண்டன்புதூரில் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாலை நேரத்தில் சென்றோம். தோட்டத்துக்கு அருகில் கூரை வேய்ந்த 2 வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீட்டில் ஐ.டி. ஊழியர்களுடன் தரையில் அமர்ந்து, இயற்கை விவசாயம் தொடர்பாக கலந்துரையாடி கொண்டிருந்தார் தங்கவேல். சுவரில் நம்மாழ்வாரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு, அதன் கீழ் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது.

கலந்துரையாடலை சிறிது நேரத்தில் முடித்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். “நான் சிறுவயதில் இருந்தே அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன். 1991-ம் ஆண்டில் இருந்து நானே தனியாக விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். எங்க அப்பா ரசாயன விவசாயம் செய்தார். ஆனால் நான் தொடக்கத்தில் இருந்தே இயற்கை விவசாயம் தான் பண்ணிக்கிட்டு வர்றேன். நம்மாழ்வார் ஐயாவோட கருத்துக்களை நிறைய வாசிச்சு இருக்கேன். அவரு பேச்சுகளையும் நிறைய கேட்டுருக்கேன். அது தான் நான் தொடர்ந்து இயற்கை விவசாயம் பண்றதுக்கு உந்துதலா இருந்துச்சு.

அதேபோல, 2008-ல் சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். அந்த பயிற்சி வகுப்பு என்னோட விவசாய முறையை பெரிய அளவில் மாற்றியது என்று சொல்லலாம். அவரோட வழிமுறைகள் எல்லாம் ரொம்பவும் எளிமையா செலவு குறைவா பண்ற மாதிரி இருக்கு. ரிசல்ட்டும் நல்லா இருக்கு. நான் இப்போ வரைக்கும் அவரோட வழிமுறைகளைதான் பின்பற்றிக்கிட்டு இருக்கேன்.

நான் இத்தனை வருஷமாக இயற்கை விவசாயம் பண்றது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு சொல்லி கொடுத்துக்கிட்டும் இருக்கேன். கீரை சாகுபடியில்தான் இயற்கை விவசாயத்தை எளிமையாகவும் வேகமாகவும் கத்துக்கொடுக்க முடியும். அதனால் கீரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

கோயம்புத்தூரில் இருக்கிற அரசு பள்ளிகளுக்கு சென்று கீரை வளர்க்குறது எப்படின்னு மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஈஷா விவசாய இயக்கம் மூலமாகவும் கீரை சாகுபடி பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைக்கு இயற்கை விவசாயத்தை கொண்டுபோக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் என்னோட தோட்டத்தை பாத்துக்குற முழு பொறுப்பையும் பிரபாகரிடம் ஒப் படைச்சுட்டேன்” என்று பிரபாகரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சுறுசுறுப்பான இளைஞரான பிரபாகர், தங்கவேலை போன்றே கீரை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர். அவர் கீரை சாகுபடி தொடர்பாக ஏராளமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“தமிழகத்தில் 40 வகையான கீரைகளை விளைவிக்க முடியும். அதில் 27 வகையான கீரைகளை நாங்கள் விளைவிச்சுக்கிட்டு இருக்கோம். ஏராளமான சத்துக்கள் நிறைஞ்ச கீரைகளை சாப்பாட்டுல அதிகமா சேத்துக்கணும்னு டாக்டர்கள் சொல்லிக்கிட்டே இருக்காங்க. அது உங்களுக்கு தெரியும். ஆனா, கீரைைய ஆய்ஞ்சு சமைக்கிறதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு மக்கள் சோம்பேறித்தனம் பட்டுக்கிறாங்க. உடம்பை ஆரோக்கியமாக வைச்சுக்கணும்னா அந்த சோம்பல் குணத்தை கொஞ்சம் மாத்திக்கணும். கீரை வகைகளை அதிகமாக சாப்பிடணும்.

இப்போது கண் பிரச்சினைகளுக்காக நிறைய பேர் சிறுவயதிலேயே கண்ணாடி போட்டுக்கொள்கிறார்கள். இந்த நிலையை நாம் மாற்றவேண்டும். அதுக்கு கீரையோட அவசியத்தை மக்களுக்கு புரிய வைக்கணும். அந்த நோக்கத்திலேயும் நாங்கள் கீரை சாகுபடி பண்ணிக்கிட்டு வர்றோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “நாங்கள் இப்போது 2 ஏக்கரில் கீரை சாகுபடி செய்கிறோம். பொதுவாக கீரைகளை அறுவடை காலத்தைவைத்து மூன்று வகையாக பிரிக்கலாம். அந்த கீரை வகைகளை தனித் தனியாக பிரித்து பயிர் செய்யவேண்டும்” என்றவர், அதை பற்றி விளக்குகிறார்.

“முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, செங்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரைகள் முதல் வகை. இவை ஒரு மாதத்தில் வளர்ந்துவிடும். அந்த கீரைகளை ஐந்தாறு நாட்களில் பறித்துவிட்டு, மறுபடியும் விதை தூவிவிடலாம்.

அரைக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக்கீரை, சுக்கான்கீரை, புளிச்சக்கீரை, கொடிப்பசலைக்கீரை, சீலோன்பசலைக் கீரை, மொடக்கத்தான், கொத்தமல்லி போன்ற கீரைகள் இரண்டாவது வகை. இந்த கீரைகளை விதைத்தால், ஒரு மாதத்தில் இருந்து ஐந்தாறு மாதங்கள் வரைக்கும் பறிக்கலாம்.

முருங்கை, அகத்தி, புதினா, கறிவேப்பிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, வல்லாரை போன்ற கீரைகள் 3-வது வகை. இந்த கீரைகள் ஒரு வருஷத்துக்கு மேல் பலன் தரும்” என்று விரிவாக பேசினார் பிரபாகர்.

இதனிடையே, ‘கீரை சாகுபடியில் லாபம் பார்க்க முடியுமா?’ என தங்கவேலிடம் கேட்டதற்கு “நீங்க முதலில் ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். என்னை பொறுத்த வரைக்கும் இயற்கை விவசாயம்ங்குறது ஒரு தொழில் இல்ைல. அது ஒரு கலாசாரம். இதில் பணம் இரண்டாம்பட்சம் தான். சக மனிதர்களுக்கு விஷமில்லாத உணவு கொடுக்கணும்ங்கிற எண்ணம் தான் முதன்மையா இருக்கும். நீங்க தரமான பொருட்களை உற்பத்தி செய்தால், லாபம் தானாக வரும். என்னை எடுத்துக்கோங்க. லாபம் இல்லாமலா 27 வருசமா இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்?” என்று மனதில் இருப்பதை பளிச்சென்று கூறினார்.

இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும், ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

-தொடரும்.

கீரை பயிரிடும் முறை

* நிலத்தை 2 முறை நன்கு உழ வேண்டும். 2-வது உழவில் ஏக்கருக்கு 4 லோடு நாட்டு மாடு எருவை நிலத்தில் போட வேண்டும்.

* 100 சதுர அடி வருவதுபோல் பாத்தி அமைக்க வேண்டும். ஸ்பிரிங்ளர் போடுவதாக இருந்தால் 5x20, 3x33 போன்ற அளவுகளில் அரை அடி உயர்த்தி மேட்டுப் பாத்தி போடலாம்.

* வாய்க்கால் பாசனம் என்றால் மூன்று அடி அகலம், 10 அடி நீளம், முக்கால் அடி உயரம் வைத்து வரிசையாக பாத்தி போடலாம். ஒரு பாத்திக்கும் இன்னொரு பாத்திக்கும் ஒரு மண்வெட்டி அளவு இடைவெளி விட வேண்டும். தோராயமாக 3 பாத்தியோட மொத்த அளவு 100 சதுர அடியாக இருக்கும்.

* முதல் 100 சதுர அடியில் முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, செங்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரைகளின் விதைகளை 20 கிராம் முதல் 200 கிராம் வரை தூவி விட வேண்டும். (மண்ணின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு ஊர்களில் இந்த அளவு சற்று மாறுபடும். அதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்)

* 2-வது 100 சதுர அடியில் பால கீரையின் விதைகளை 7 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டு 5 இன்ச்க்கு ஒரு குத்து வைக்க வேண்டும். அதேபோல், அடுத்தடுத்த வரிசைகளில் அதே அளவில் சுக்கான் கீரை விதைகளை 5 இன்ச்க்கு ஒரு குத்தும், புளிச்ச கீரையை 3 இன்ச்க்கு ஒரு குத்தும் வைக்க வேண்டும்.

* 3-வது 100 சதுர அடியில் புதினா, பொன்னாங்கண்ணி, சிவப்பு கீரை போன்ற கீரைகளை 14 கட்டு என்ற அளவில் எடுத்து 4 இன்ச்க்கு ஒன்று என அடர் நடவு முறையில் குத்துவைக்க வேண்டும். அதற்கு இடையே, கறிவேப்பிலை, அகத்தி கீரைகளை ஊடு பயிராக பயிரிடலாம்.

* பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான், வல்லாரை, அகத்தி கீரை போன்றவற்றை வரப்பு ஓரங்களில் நட்டால், அவை உயிர்வேலியாகவும் செயல்பட்டு பூச்சி தாக்குதலை குறைக்கும்.

* ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கன ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் ஆகியவற்றை தேவைக்கேற்ப அவ்வப்போது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

* கீரைநடும் முன்பாக உங்கள் ஊரில் எந்த வகையான கீரைகள் நன்கு வளர்கின்றன என்பதை தெரிந்து கொண்டு நடுவது அவசியம்.

Next Story