பெண்களின் உடல் மணக்கட்டும்..


பெண்களின் உடல் மணக்கட்டும்..
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM GMT (Updated: 19 Oct 2018 1:55 AM GMT)

பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள்.

பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம் சுளித்து விடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.

நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பி கள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.

எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.

இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?

வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.

வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன் படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்து வரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.

தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர் களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால் வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.

டியோடரண்டுகள் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க..

சாயனப் பொருட்களின் கலவைதான் டியோடரண்டுகளாக உருவாகின்றன. எல்லோருடைய சருமத்திற்கும், எல்லா விதமான ரசாயனங்களும் ஒத்துக்கொள்ளாது. ஒத்துக்கொள்ளாததை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அதை பயன்படுத்தாதீர்கள்.

டியோடரண்ட் பயன்படுத்தும் ஆண்கள், முகசவரம் செய்த உடன் இதனை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் சொறி, திட்டாக தடித்தல் போன்றவை ஏற்படும். இந்த தொந்தரவை தவிர்க்க ஒரு மணி நேர இடைவெளியாவது அவசியம்.

திரவம் மற்றும் ஸ்பிரே வடிவில் இருக்கும் டியோடரண்ட்டை நன்றாக குலுக்கிவிட்டு பயன்படுத்துங்கள்.

சில வகை டியோடரண்டுகள் வியர்வையோடு செயல்பட்டு அணியும் உடைகளில் மஞ்சள் நிறத்தை உருவாக்கிவிடும். அதை கவனத்தில்கொண்டு பயன்படுத்துங்கள். ஒரே இடத்தில் அதிக அளவு டியோடரண்டு பயன்படுத்த வேண்டாம்.

எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம் என்று திட்டமிடுவதற்கு பதில், உடலை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறை செலுத்துங்கள். தினமும் குளித்து, உடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பது, டியோடரண்டு பயன்பாட்டை குறைக்கும். உடலையும் மணக்கச் செய்யும்.

Next Story