இரண்டு காதுகள்... ஆனால் ஒரு வாய்தான் ஏன் தெரியுமா?


இரண்டு காதுகள்... ஆனால் ஒரு வாய்தான் ஏன் தெரியுமா?
x
தினத்தந்தி 21 Oct 2018 3:15 AM GMT (Updated: 19 Oct 2018 2:01 AM GMT)

பெண்களில் சிலருக்கு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பது ரொம்ப பிடிக்கும்.

பெண்களில் சிலருக்கு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பது ரொம்ப பிடிக்கும். இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் பேச விஷயங்கள் இல்லாதபோது, அடுத்தவர்களை பற்றி பேசத் தொடங்கிவிடுவார்கள். அந்த பேச்சு பல நேரங்களில் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும். அதனால் நிம்மதியை இழந்த பெண்கள் நிறைய உண்டு.

இன்னொரு வகையினர், வீட்டு பிரச்சினைகள் முதல் அலு வலக பிரச்சினைகள் வரை அனைத்தையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். தனது தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றன்று அடுத்தவர்களிடம் சொன்னால்தான் அவர்களுக்கு தூக்கமே வரும். இப்படிப்பட்டவர்களில் சிலர் சொல்லக்கூடாத விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டு, நிம்மதியிழந்து தவிக்கிறார்கள்.

நீங்கள் உங்களை பற்றிய முக்கியமான ரகசியங்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும்போது, அதை வைத்து சிலர் உங்களை மிரட்டலாம். பணம் பறிக்கவும் செய்யலாம். நிலைமை எல்லைமீறி போய்விடும் அந்த நேரத்தில் நீங்கள் வருந்தி பலனில்லை.

இப்போது எல்லா அலுவலகங்களிலும் ஆண்களும், பெண்களும் இணைந்து வேலைபார்க்கிறார்கள். அவர்களில் சிலர், ஒருவரது குடும்ப விஷயங்களை பற்றி தெரிந்துகொண்டு அடுத்தவர்களிடம் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதை ஒரு பொழுதுபோக்காக கையாளுவார்கள்.

எல்லா வீடுகளுக்கும் வாசல்படி இருப்பதுபோல், எல்லோரது வாழ்க்கையிலும் ரகசியங்களும் இருக்கும். பிரச்சினைகளும் இருக்கும். அவைகளை மற்றவர்கள் அறிய முயற்சிப்பது அபத்தம். அதை அறிந்துகொண்டு அந்த சம்பவங்களுக்கு கண், காது வைத்து அடுத்தவர்களிடம் போய் சொல்வது கண்டிக்கக்கூடிய குற்றம்.

அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து தேவையற்ற விஷயங்களை திரட்டுவது, மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி இன்னொருவர் சொல்வதை துருவித் துருவி கேட்பது, அவைகளை எல்லாம் தொகுத்து இன்னும் பலரிடம் சொல்வது போன்ற அனைத்துமே ஒருவித மனோவியாதி என்று, மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த ‘பழக்கம்’ ஏற்படும் தொடக்ககாலத்திலே, அது தவறு என்பதை உணர்ந்துகொண்டால், அதிலிருந்து ஓரளவு விடுபட முடியும். அதுவே சுபாவமாக மாறிவிட்ட பின்பு, அந்த தவறை அவர்களே புரிந்துகொண்டாலும் அவர்களால் அதை தடுத்து நிறுத்த முடியாது. அவர்களது மூளை எப்போதும் சுற்றியிருப்பவர்களை பற்றியே சிந்தித்து சுழன்று கொண்டிருக்கும். கிடைக்கும் விஷயத்தை வைத்துக்கொண்டு கூடுதலாக இவர்களே ஆளுக்குதக்கபடி கற்பனைகளை கலந்து புதுப்புது விஷயங்களை தயார்செய்வார்கள். அதை மற்றவர்களிடம் சொல்லும் வரை அவர்களுக்கு மண்டை வெடித்துவிடும்போல் இருக்கும்.

இந்த பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டால்தான் நிம்மதியாக வாழமுடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபக்கத்தில் இருந்துகொண்டிருந்தாலும், அதில் இருந்து மீண்டுவர அவர்களால் முடியாது. சொறிந்து சுகம் கண்டவர்கள் புண் ஆறிய பின்பும், சொறிந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குவதுபோன்று அது அமைந்துவிடும்.

ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் அந்தரங்கங்கள் இருக்கும். அதைப் பற்றி யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருப்பார்கள். அப்படியே யாருக்காவது தெரிந்துவிட்டாலும், அது அவரைக் கடந்து மற்றவர்களிடம் போய்விடக் கூடாது என்பதிலும் மிகுந்த கண்டிப்புகாட்டுவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கம் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்றடையும்போது, அது சில நேரங்களில் வன்முறைக்கு காரணமாகி விடுகிறது.

பொதுவாக இப்படி அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் ஆர்வம் செலுத்தும் மனிதர்களின் மூளை வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி சிந்திக்காது. இது அவர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்பு மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கையையே சீர்குலையச் செய்துவிடும். அவர்கள் குடும்ப உறவுகளும் நன்றாக இருக்காது. அவர்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் சுமையாகிவிடுவார்கள். ஆரோக்கியமற்றவர்களாகவும் ஆகி விடுவார்கள்.

மனித படைப்பு அற்புதமானது. ஒவ்வொருவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு வாய்தான் உள்ளது. ஏன்? இரண்டு கண்களால் நிறைய காட்சிகளை காணலாம். இரண்டு காதுகளால் ஏகப்பட்ட விஷயங்களை பேசலாம். ஆனால் அளவோடு, அவைஅறிந்து பேசவேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வாய் உள்ளது. இந்த உண்மையை உணர்ந்து சிந்தித்து, அளவோடு பேசுவது நல்லது!

அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்க..

நேரம் பொன் போன்றது என்பதை உணருங்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் உங்கள் முன்னேற்றத்துக்காக எப்படி செலவிடலாம் என்று சிந்தியுங்கள். உங்கள் நேரத்தை மற்றவர்களை பற்றி சிந்திக்கவும், மற்றவர்களை பற்றிய விஷயங்களை அறியவும் செலவிடாதீர்கள். அதன் மூலம் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை உணருங்கள்.

மற்றவர்களை பற்றி உங்களிடம் யாராவது பேச முன்வந்தால், அவரை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரொம்ப ஆர்வமாக அதை கேட்காதீர்கள். உங்கள் ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு அவரும் மற்றவர்களை பற்றிய புதிய வதந்திகளை உங்களிடம் பேசி உங்களையும் அந்த வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

பெண்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். நான்கு பெண்கள் சேர்ந்தாலே அடுத்தவர்களை பற்றிதான் பேசுவார்கள் என்ற கணிப்பு இருக்கிறது. அதை தவறு என்று நிரூபியுங்கள். அப்படி நிரூபித்து, நீங்கள் மற்றவர்களை பற்றி பேசாமல் இருந்தால்தான் உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் அப்படிப்பட்ட குணம் இல்லாதவர்களாக வளருவார்கள்.

நீங்கள் மற்றவர்களை பற்றி பேசி பொழுதுபோக்குபவராக இருந்தால் நிச்சயம் நீங்கள் அதிக நேரத்தை செல்போனில் செலவிடுபவராக இருப்பீர்கள். அந்த நேரத்தில் உங்கள் கவனம் உங்கள் குடும்பத்தின் மீது இருக்காது. அதன் மூலம் உங்கள் குடும்ப வளர்ச்சி உங்கள் கண்முன்னாலே பாதிக்கப்படுவதை உணருவீர்கள்.

Next Story