உணவில் புதுமைசெய்யும் ‘புட் தெரபி’


உணவில் புதுமைசெய்யும் ‘புட் தெரபி’
x
தினத்தந்தி 21 Oct 2018 6:00 AM GMT (Updated: 19 Oct 2018 4:54 AM GMT)

உலகளாவிய நிலையில் தற்போது மக்களிடம் உணவு மீதான விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.

லகளாவிய நிலையில் தற்போது மக்களிடம் உணவு மீதான விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. கிடைத்த உணவை சாப்பிடுவது என்ற நிலையில் இருந்து ஒருபடி மேலே சென்று, தனக்கு பிடித்தமான உணவை தேடிச் சென்று சாப்பிடும் நிலையை அடைந்திருக் கிறார்கள். இந்தியர்களுக்கு சுற்றுப்பயணங்களிலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இப்போது எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு முக்கியமான பகுதிகளில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் நிறைய இந்தியர்களை காண முடிகிறது. அவர்கள் அந்தந்த நாட்டு உணவுகளை ருசிப்பதிலும், அவைகளை பற்றி முழுமையாக அறிந்துகொள்வதிலும அதிக விருப்பம்காட்டுகிறார்கள்.

உலகி்ல் உள்ள அத்தனை நாட்டு உணவுகளை ருசித்தாலும், ‘ருசி நிறைந்த உணவுகளின் தாயகம்’ என்று இந்தியாவை சொல்லலாம். இங்கு போல் ருசி நிறைந்த, சத்து மிகுந்த உணவுகள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அதனால் இந்திய உணவுகள் குறிப்பாக தென்னிந்திய உணவுகள், உலகின் எந்த பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் உடனடியாக அங்குள்ள மக்களிடம் அவை அமோக வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இங்குள்ள சாம்பாராக இருந்தாலும், சட்னியாக இருந்தாலும், ரசமாக இருந்தாலும் அது உடலுக்கு சக்தியை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் சேர்த்து தருவதுதான்!

இப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. நமது உடல் நலத்தை மேம் படுத்த ‘தெரபி’ எனப்படும் சிகிச்சை முறைகள் நிறைய இருக்கின்றன. சைக்கோ தெரபி, மியூசிக் தெரபி, ஆர்ட் தெரபி, அரோமா தெரபி போன்ற பல தெரபிகளின் வரிசையில் இப்போது புதிதாக இடம்பெறுவது, ‘புட் தெரபி’. இது மிகுந்த மகத்துவம் கொண்டது. உணவையே மருந்தாக்கி சிகிச்சையளிக்கும் புட் தெரபி பற்றிய ஆய்வுகள் ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற ஆராய்ச்சி மையங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆராய்ச்சிகளின் முழுமையான முடிவுகள் தெரியவந்த பின்பு, அதை ஒரு சிகிச்சை முறையாக வடிவமைத்து நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்பு உருவாகும்.

‘உணவு, உடலுக்கு தேவையான சக்தியை மட்டும் தருவதில்லை. அதற்கு அப்பால் உடலின் அடிப்படையான செல்களில் ஊடுருவி பல்வேறு மாற்றங்களையும் உருவாக்குகிறது’ என்பதை உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதனால் நோயாளிகளுக்கு உணவையே மருந்தாக்க முடியும் என்ற கோணத்தில் அந்த ஆய்வுகள் நடக்கின்றன. நோய்களை தடுக்கும் உணவுகளை சாப்பிடுதல், நோய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் உணவுகளை தவிர்த்தல், நோய்களின் தன்மைக்கு ஏற்ப சில பிரத்யேக உணவுகளை மேம்படுத்தி பரிந்துரை செய்தல் போன்றவை புட் தெரபியின் அடிப்படையாக இருக்கும்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு ஜீரண மண்டலம் தொடர்புடைய நோய்களில் ஏதாவது ஒன்று இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அசிடிட்டி, நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புதல், பசியின்மை, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் இதில் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய நோய்களுக்கு தவறான உணவுப் பழக்க வழக்கம் முக்கிய காரணம் என்று, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளது. இந்த உண்மையை உலகமே இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் நமது உணவுப் பழக்கத்தில் பெரும் முரண்பாடு ஒன்று நிகழ்ந்திருக்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக சமையல் அறையில் இருந்து வெளியேறி, ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். வார கடைசியில் ஒருநாள் ஓட்டலில் சாப்பிடுவது என்ற வழக்கம் பல குடும்பங்களில் உள்ளது. அவ்வப்போது ஓட்டல்களில் சாப்பிடுவது, புதிய புதிய ஓட்டல்களை நாடிச்சென்று ருசிப்பது போன்ற பழக்கமும் பல குடும்பங்களில் உள்ளது. ருசிக்க ருசிக்க சாப்பிட்டுவிட்டு வாய் வலிக்க வலிக்க சொல்வது சிலரின் வழக்கமாக இருக்கிறது.

வீடுகளில் சாப்பிடுவதற்கும், ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வீடுகளில் அவரவருக்கு தேவையான உணவு கள் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும். அங்கே ருசியைவிட ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். வீட்டில் இருக்கும் உணவை பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டுவிடுவோம் அல்லது பசி ஏற்பட்ட உடன் சாப்பிட்டுவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும்போது நிதானமாக இயல்பாக சாப்பிடுவோம். அந்த சுற்றுப்புற சூழலும் நமக்கு பிடித்தமானதாக இருக்கும். இதனால் சாப்பிடும் உணவு இயல்பாக ஜீரணமாகும் சூழ்நிலை உருவாகிறது.

ஆனால் ஓட்டலில் அப்படி அல்ல! அங்கு பலரும் பசியோடு போய் உட்கார்ந்திருப்பார்கள். பசியோடு ஆர்டர் செய்தாலும் உணவு உடனே கிடைக்காது. உணவு கிடைத்தாலும் கூட்டமாக இருந்தால் வேகமாக சாப்பிட வேண்டியிருக்கும். அங்கு ஆரோக்கியத்தைவிட ருசிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். பொருத்தமான சூழ்நிலையும் அமையாது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளால் ஓட்டல்களில் சாப்பிடுகிறவர்களுக்கு ஜீரண தொடர்புடைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. நோய்களில் இருந்து பாதுகாக்க, முறையான உணவுப் பழக்கத்தை கையாள முன்வர வேண்டும்.

புட் தெரபி என்பது வெளிநாட்டினருக்கு புதிய விஷயமாக இருந்தாலும் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் அது ஒரு வாழ்வியல் பழக்கமாக நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உடல் நலனுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுவதை நாம் ெதான்றுதொட்டே கடைப்பிடித்து வருகிறோம். அதனால்தான் அதிக மருந்தின்றி இந்தியர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இந்திய உணவு களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதற்கும் இதுதான் காரணம். இந்திய உணவு பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதற்கும் இதுதான் காரணமாக இருக்கிறது.

வயிற்று உபாதைகளால் சிரமப்படுகிறவர்கள் அல்லது வயிற்றுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று கருதுபவர்கள் மது அருந்தக்கூடாது. கபீன், பொரித்த உணவுகள், அதிக மசாலா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி, பழவகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து கொண்ட உணவுகள் அவர்களுக்கு மிக முக்கியம்.

பூண்டும், வெங்காயமும் இதயத்திற்கு வலு சேர்க்கும். தினமும் பத்து சிறிய வெங்காயத்தை பச்சையாகவே சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். தினமும் பூண்டுவை பச்சையாகவோ, உணவில் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோய்க்கும்- இனிப்புக்கும் எவ்வாறு தொடர்பிருக் கிறதோ அதுபோல் உயர்ரத்த அழுத்தத்திற்கும்- உப்பிற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஒருவர் தினமும் ஆறு முதல் எட்டு கிராம் வரை உப்பு பயன்படுத்தலாம். இது ஒரு தேக் கரண்டியாகும். ஆனால் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவர்கள் தினமும் கால் தேக்கரண்டி உப்புதான் பயன்படுத்தவேண்டும். ஊறுகாய், கருவாடு, சாஸ், சீன உணவுகள் போன்றவற்றில் அதிக அளவு உப்பு இருக்கிறது. அவை யாவும் தவிர்க்கவேண்டிய உணவுகளாகும். வெளி உணவுகளில் அதிக ருசிக்காகவும், அதிக நேரம் உணவு கெட்டுப்போகாமல் இருக்கவும், நன்றாக உணவு பொரிந்து வரவும், அவைகளில் உப்பை அதிகம் சேர்க் கிறார்கள்.

இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புகிறவர்களுக்கு பாதாம், வால்நட் போன்றவை நல்லது. அவைகளில் வைட்டமின் பி 2, வைட்டமின் ஈ, மெக்னீஷியம், சிங்க் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. இவை மனநிலையை சமன்படுத்தவும், இதயத்தை வலுப் படுத்தவும் உதவும். தினமும் 6 முந்திரி பருப்புகளும் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சிங்க், மெக்னீஷியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களும், கரோட்டினாய்ட் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்களும் உள்ளன. ஆனால் சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடும்போது கவனம் தேவை. நெல்லிக்காய் சாப்பிடும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

புதிய ஆய்வுகள் ஆப்பிள் சாப்பிடவும் பரிந்துரைக்கின்றன. ‘அமெரிக்கன் ஜெர்னல் ஆப் ரெஸ்பிரேட்டரி கிரிடிக்கல் கேர்’ வெளியிட்டிருக்கும் ஆய்வு, வாரத்தில் இரண்டு ஆப்பிள் பழங்களாவது சாப்பிடவேண்டும் என்கிறது. இது ஆஸ்துமா வரும் சூழலை பெருமளவு குறைக்கும் என்று குறிப்பிடுகிறது. கர்ப்பகாலத்தில் ஆப்பிள் சாப்பிட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஐந்து வயதாகும் வரை ஆஸ்துமா தொந்தரவு ஏற்படாது என்றும் சொல்கிறது. 100 கிராம் ஆப்பிள் சாப்பிட்டால் அதே அளவு ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைப்பதைவிட மூன்று மடங்கு ஆன்டி ஆக்சிடென்ட் உடலுக்கு கிடைக்கும்.

நினைவாற்றல் குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இயந்திரதனமான வாழ்க்கை, மன அழுத்தம் நிறைந்த பணிகள், ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்வதால் ஏற்படும் நெருக்கடிகள், மதுப்பழக்கம், வாழ்க்கை நிலை முரண்பாடுகள், தவறான உணவுப் பழக்கம் போன்றவைகள் நினைவாற்றல் மங்க காரணமாகும். இந்த பாதிப்புகளை எல்லாம் குறைத்து நினைவு வளத்துடன், ஆரோக்கியமாக வாழ ‘புட் தெரபி’ கைகொடுக்கும் என்று நம்பலாம்.

கட்டுரை: முனைவர் ஜெ.தேவதாஸ், (உணவியல் எழுத்தாளர்) சென்னை.

Next Story