அதிசய அம்மாவும்.. ஆச்சரிய மகளும்..


அதிசய அம்மாவும்.. ஆச்சரிய மகளும்..
x
தினத்தந்தி 21 Oct 2018 6:30 AM GMT (Updated: 19 Oct 2018 5:39 AM GMT)

‘திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவது எப்படி?’ என்று, மண வாழ்க்கையில் இணைய இருக்கும் ஜோடிகளுக்கு வகுப்பு நடத்தி சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு இன்றைய சமூக நிலை இருந்துகொண்டிருக்கிறது.

‘திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவது எப்படி?’ என்று, மண வாழ்க்கையில் இணைய இருக்கும் ஜோடிகளுக்கு வகுப்பு நடத்தி சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு இன்றைய சமூக நிலை இருந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வகுப்புகளில் கலந்துகொண்டு ‘பாஸ்’ மார்க் வாங்கிவிட்டு தம்பதியாகிறவர்கள்கூட, குடும்ப வாழ்க்கையில் ‘பாஸ்’ ஆவது கடினம் என்ற நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. ‘மணவாழ்க்கை சிறப்படைய வேண்டும் என்றால் மனைவியாக வரும் பெண்ணுக்கு வயதும் மிக முக்கியம்’ என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. பதினெட்டு வயதில்தான் பெண்களுக்கு உடல் பலமும், மன பக்குவமும் கிடைக்கும் என்பதால், அதை திருமண வயதாக நிர்ணயித்திருக்கிறார்கள். ‘அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்ங்க! இளமையில் எத்தனை வயதில் திருமணம் செய்துவைத்தாலும், மனதில் பக்குவத்தை வளர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி, சிறப்பாக வாழலாம்’ என்று வாழ்ந்துகாட்டும் தாய்மார்களும் நம்மோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர், வெங்கடரமணி. திருச்சியில் பிறந்து, திடீரென்று தாயார் இறந்ததால், 15 வயதில் மணமாகி பெங்களூரு மணமகனை கரம்பற்றியவர். படித்தது பத்தாம் வகுப்புதான். தமிழைத்தவிர வேறு மொழியும் தெரியாது. தெரியாதவைகளை பற்றி கவலைப்படாமல், தெரிந்தவைகளை வைத்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி, 16 வயதில் மகளை பெற்றெடுத்திருக்கிறார். 18 வயதில் மகன் பிறந்திருக்கிறான். இருவரையும் வளர்த்து நல்லநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அந்த தாய் வெங்கடரமணிக்கு இப்போது 49 வயது. மகள் டாக்டர் ஹரினீஸ்வரிக்கு 32 வயது. இவர்களை நாம் ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை பல்வேறு ருசிகரமான நிகழ்வுகளை நடத்திக்காட்டி அவர்கள் இருவரும் ஈர்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை வடிவமைத்து நடத்திக்கொண்டிருந்த அவர்களும் பார்வையாளர்களை கவர்ந்தார்கள். அப்போது பலரும், ‘அக்காள், தங்கையாக’ அவர்களை கருதிக்கொண்டிருக்க, நாம் அவர்களை சந்தித்து பேசிய போதுதான் ‘தாயும், மகளும்’ என்பதும், வெங்கடரமணியின் பின்னணியில் இவ்வளவு பெரிய வாழ்க்கை கதை இருப்பதும் தெரியவந்தது. இவரிட மிருந்து பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

“எனது அம்மாவுக்கு 35 வயதாக இருந்தபோது அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்துபோனார். நாங்கள் ஐந்து குழந்தைகள். அதில் நான்தான் மூத்தவள். அதனால் எனக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார்கள். பத்தாம் வகுப்பு பரீட்சை தேர்வு முடிவு வெளிவந்த அன்று என்னை பெண் பார்க்க வந்தார்கள். நான் உயரமாக, கம்பீரமான தோற்றத்துடன் இருந்ததால், அவர்களும் சம்மதித்தார்கள். திருமணம் முடிந்து கணவர் கதிரேசனோடு பெங்களூரு சென்றேன். என் மாமனார் பழனியப்பன் செட்டியார், சிவாஜி நகர் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர்.

நாங்கள் அங்கு கூட்டுக்குடும்பமாக வசித்தோம். வீட்டில் 15 பேர் இருந்தார்கள். வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் எங்கள் கூட்டுக்குடும்பத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். சுதந்திரமாக வாழ்ந்தேன். தாய்மையடைந்தேன். குழந்தைகளை பெற்ெறடுத்தேன். வளர்த்தேன். எனக்கு இளம் வயது என்பதால் எந்த பிரச்சினையும் தோன்றியதில்லை. ஆனால் எனது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன. மற்றவர்கள் அதை கஷ்டம் என்று எடுத்துக்கொள்வார்கள். நான் அதை தன்னம்பிக்கைக்கான விஷயம் என்று புன்னகையோடு ஏற்றுக்கொண்டேன். புலம்பல் வாழ்க்கைக்கு தேவையில்லை. புன்னகைதான் தேவை..” என்றபடி, ஒரு சம்பவத்தை வெங்கடரமணி நினைவுபடுத்தினார்.

இவரது கணவர் கதிரேசன், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள லைபீரியா நாட்டில் மன்ரோவியா என்ற இடத்தில் சில வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். அப்போது ஹரினீஸ்வரிக்கு 3 வயது. அவரது தம்பி நந்தகுமாருக்கு ஒன்றரை வயது. இருவரையும் தூக்கிக்கொண்டு வெங்கடரமணி முதல் முறையாக விமான பயணம் மேற்கொண்டிருக்கிறார். மாற்று விமானத்தில் ஏற்பட்ட திடீர் நெருக்கடியால் இவர் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் முழுக்க சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் விமான நிறுவனம் மூலம் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 20 வயதில் இரு குழந்தை களோடு தமிழ் மட்டுமே தெரிந்த இவர் தைரியமாக சமாளித்து, அடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் லைபீரியா சென்றிருக்கிறார். சில மாதங்களில் அங்கு உள்நாட்டு போர் தொடங்கியிருக்கிறது. இவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே குண்டுகள் வெடிக்கும் சத்தமும், கடும் சண்டையும் நடந்திருக்கிறது. உடனடியாக அங்கிருந்த வெளிநாட்டினரை எல்லாம் அவரவர் தாய் நாட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்போது ஒவ்வொரு நாளும் ஒருசில விமானங்களே பறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்கள் காத்திருந்து, குழந்தைகளோடு விமானத்தில் இந்தியா திரும்பியிருக்கிறார். இவரது கணவர் கதிரேசன் அங்கிருந்து ராணுவ விமானத்தில் லண்டனுக்கு அகதியாக ெகாண்டு செல்லப்பட்டிருக்கிறார். பின்பு அங்கிருந்து, இந்தியா வந்துள்ளார்.

“வாழ்க்கையில் நான் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டேன். என் குழந்தைகளையும் கவலைப்படவிடமாட்டேன். ஏனென்றால் நாம் கவலைப்பட்டால் கவலைதான் கூடும் என்பது எனக்கு தெரியும். அதனால் எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்று, தைரியமாக சமாளிக்க கற்றுக்கொண்டேன். மொழி தெரியாவிட்டாலும் சைகையால் புரியவைத்தாவது தேவையை நிறைவேற்றிவிடுவேன். பணம் என்பது வாழ்க்கைக்கு ஓரளவு தேவைதான். ஆனால் திருப்தியையோ, சந்தோஷத்தையோ பணத்தால் பெற முடியாது என்பதும் எனக்கு தெரியும். அதனால் மிக குறைந்த அளவு பணத்தில்கூட மகிழ்ச்சியாக வாழ நான் என் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறேன். இன்னொரு விஷயம், நான் இளம் வயதிலே திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், பெண்கள் 21 வயதில் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது” என்று கூறும் வெங்கடரமணி, இப்போது ஆங்கிலத்தில் பேசும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இவரது மகள் ஹரினீஸ்வரி பல் மருத்துவம் படித்திருந்தாலும், சகல கலாவல்லியாக திகழ்கிறார். பள்ளிப்படிப்பில் இருந்தே படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து வந்திருக்கிறார்.

“எனக்கு 11 வயதாக இருந்தபோது நாங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தோம். சிறுவயதில் இருந்தே நான் தனித்திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினேன். த்ரோபால், உயரம்தாண்டுதல் போன்றவைகளில் பரிசுகள் பெற்றேன். எனது தந்தை கராத்தேயில் பிளாக்பெல்ட் வாங்கியவர். அதனால் நானும் ஆர்வத்தோடு கராத்தே கற்றேன். இன்றும் நான் மற்றவர்களை எளிதில் மதிப்பீடு செய்யவும், சமயோசிதமாக சிந்திக்கவும், தைரியத்தோடு அதிரடியாக செயல்படவும் கராத்தே கைகொடுக்கிறது. கர்நாடக சங்கீதமும் கற்றேன். ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்றவைகளிலும் தேர்ச்சியடைந்திருந்தேன்.

பள்ளிப் பருவத்திலே நான் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுக்கொண்டிருந்தாலும் எனக்கு பல் வரிசை சரியாக இருக்காது. அதனால் சிரிக்கமாட்டேன். அது எனக்குள்ளே ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிவிட்டது. பல் டாக்டரிடம் சென்று சரிசெய்த பின்பு எனது முகதோற்றம் மெருகேறியது. புன்னகை எனக்கு புதுப்பொலிவை தந்தது. தாழ்வுமனப்பான்மையும் அகன்றது. இத்தனை அற்புதங்களை பல்மருத்துவம் செய்யும் என்பதால், நானும் பல்மருத்துவம் பயின்று என்னால் முடிந்த சேவையை பெண்களுக்கு செய்யவேண்டும் என்று நினைத்தேன். பெற்றோரும் ஆதரவளித்தனர். மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போதே அழகுக்கலையையும் கற்று தேர்ந்தேன்..” என்கிறார்.

இவர் பல் மருத்துவம் கற்றுக்கொண்டிருந்தபோது, தனது தோழிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் செயலிலும் ஈடுபட்டிருக்கிறார்.

“எனது தோழிகளில் சிலர், கல்விச் செலவுக்காக பகுதி நேர வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நானே வேலைவாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்க திட்டமிட்டேன். நானே ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை உருவாக்கினேன். அதற்கு ‘பிரிசம்’ என்று பெயரிட்டேன். மக்களை எளிதாக கவரும் விதத்தில் ஏராளமான அம்சங்களை நான் நடத்தும் நிகழ்ச்சிகளில் சேர்த்தேன். கடைகளில் ஸ்டால் அமைத்து, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மெகந்தி போடுதல், டாட்டூ போடுதல், பேஸ் பெயிண்டிங் வரைதல், டெக்கரேஷன் செய்தல் என்று எல்லா விஷயத்திலும் புதுமைகள் செய்ேதாம். நான் கல்லூரி மாணவியாக இருந்ததால் நிறுவனங்கள் நடத்துபவர்கள் வாய்ப்புகளை தந்தார்கள். அதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பகுதி நேர வேலைகொடுத்தேன். அவர்கள் பலன் அடைந்தார்கள். படித்துக்கொண்டிருக்கும்போதே நானும் நிறைய சம்பாதித்தேன். இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்துகொண்டிருக்கிறேன்” என்கிறார்.

டாக்டர் ஹரினீஸ்வரிக்கு 21 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. கணவர் டாக்டர் ஆர்.விஜய் எம்.டி.எஸ். படித்திருக்கிறார். நவீன சிகிச்சையில் சிறந்த பல் மருத்துவர் என்ற விருதும் பெற்றிருக்கிறார். இவர்கள் கூட்டுக்குடும்பமாக சென்னை, மகாகவி பாரதிநகரில் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு பூர்விகா, தேவ்அஸ்வின் என்ற குழந்தைகள் உள்ளனர்.

பெண்கள் வெற்றிகரமாக குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள டாக்டர் ஹரினீஸ்வரி சில ஆலோசனைகளை வழங்குகிறார்..

“பெற்றோர் வளர்க்கும் முறையில்தான் பெண்களின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. பெண்கள் எந்த துறையில் படிக்க விரும்பினாலும் பெற்றோர் அதற்கு அனுமதியளிக்க வேண்டும். அதுபோல் எத்தகைய பயிற்சிகளை ெபறவிரும்பினாலும் அதற்கு அனுமதிக்கவேண்டும். எனக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன. என்னை முழுமையாக என் பெற்றோர் நம்பினார்கள். எனது புதிய முயற்சிகளுக்கெல்லாம் ஆதரவு தந்தார்கள். கல்லூரியில் கல்வியை மட்டும்தான் கற்றுக்கொள்ள முடியும். கல்லூரி பருவத்திலே நாம் வெளி உலக வாழ்க்கையையும் கற்றுக்கொள்ளவேண்டும். இரண்டையும் கற்றுக்கொள்கிறவர்களால்தான் வாழ்க்கையை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு பெற்றோர் வாழ்ந்து காட்டி எனக்கு பாடமாக அமைந்தார்கள். திருமணத்திற்கு பிறகு என் வளர்ச்சிக்கு கணவர் மற்றும் மாமனார் டாக்டர் சி.எம்.ராஜ்குமார், மாமியார் ஆர்.கீதா ஆகியோரும் காரணமாக இருக்கிறார்கள். பெண்கள் என்ன படித்திருந்தாலும், அந்த படிப்பிற்குரிய சமூக சேவையை செய்தால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். நாங்கள் அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று முகாம்கள் அமைத்து, முடிந்த அளவு மருத்துவ சேவையாற்றி வருகிறோம்” என்று கூறும் டாக்டர் ஹரினீஸ்வரி வித்தியாசமான முயற்சி ஒன்றிலும் ஈடுபட்டு வருகிறார். அது அழகு சார்ந்தது.

இவர் ஸ்நானபவுடர், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், முல்தானிமெட்டி போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்திற்கு நலன் பயக்கும் குளியல் சோப்புகளை தயார் செய்கிறார். தனது உறவினர்கள் மற்றும் தோழிகளின் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, பரிசாக வழங்குகிறார். அதை பயன்படுத்திவிட்டு மீண்டும் அதுபோன்ற சோப்பை கேட்டால், தங்கள் தேவைக்கு தக்கபடி அவர்களே வீட்டில் தயார்செய்துகொள்ள ஆலோசனை கொடுக்கிறார். “சரும அழகு நமக்கு ரொம்ப முக்கியம். சரும பராமரிப்பு மூலம்தான் நாம் இளமையை தக்கவைக்க முடியும். அதனால் யாரோ தயாரித்த சோப்பை கண்டவிலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதற்கு பதில், நமது சருமத்திற்கு ஏற்ற இயற்கை சோப்பை நாமே தயாரித்து பயன்படுத்தி, பணத்தையும் மிச்சப்படுத்தலாம்” என்கிறார்.

Next Story