சபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு


சபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 Oct 2018 4:11 AM GMT (Updated: 20 Oct 2018 4:11 AM GMT)

பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு பக்தர்கள் தரப்பில் போராட்டம் தொடரும் நிலையில் 3-ம் நாளான நேற்று ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் (வயது 24), கொச்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமாவும் (31) அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர். அவர்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தலில் நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்து 18-ம் படி வரையில் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழிவிட மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து பெண்கள் 2 பேருக்கும் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஜி. ஸ்ரீஜித் கேட்டுக் கொண்டார். ஆனால் பக்தர்கள் அதை நிராகரித்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது. இன்னொரு புறம், பெண்களை சன்னிதானத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, மேல் சாந்திகளுக்கு உதவுகிற கீழ்சாந்திகள் என ஏறத்தாழ 35 பேர் பூஜையை நிறுத்தி விட்டு 18-ம் படி அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக பெண்களை கேரளா அரசு திரும்ப அனுப்பியது.

போராட்டம் தொடரும் நிலையில் சபரிமலை நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Next Story