‘டிப்ஸ்’... சில சுவாரசியத் தகவல்கள்!


‘டிப்ஸ்’... சில சுவாரசியத் தகவல்கள்!
x
தினத்தந்தி 20 Oct 2018 7:38 AM GMT (Updated: 20 Oct 2018 7:38 AM GMT)

உணவகங்களில் உணவு உண்டபின் ‘டிப்ஸ்’ வைக்கும் பழக்கம் பல நாடுகளில் பல விதமாகக் காணப்படுகிறது. அது பற்றிய ஒரு சுவாரசியத் தொகுப்பு இதோ...

சமீபத்தில் இங்கிலாந்தில், உணவு விடுதிகளில் ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவதைத் தடை செய்வதற்கான சட்டங்கள் குறித்த விவாதங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.

அவ்வளவு தூரம் விவாதிக்க வேண்டிய விஷயமா இது என்று நமக்குத் தோன்றும். இங்கிலாந்தைப் போல வேறு எந்த நாடும் இந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. உண்மையில், 17-ம் நூற்றாண்டில் டிப்ஸ் வழங்கும் கலாசாரத்தைத் தொடங்கியதே இங்கிலாந்து மக்கள்தான் எனக் கருதப்படுகிறது. அடித்தட்டு வர்க்க மக்களுக்கு சிறிய சன்மானம் வழங்குவதில் இருந்து இது தொடங்கியது.

எனினும், பல்வேறு நாடுகளில், பல்வேறு முறைகளில் டிப்ஸ் வழங்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. சில நாடுகளில், ஒருவருக்கு டிப்ஸ் வழங்குவது அவர்களை அவமதிக்கும் செயலாகவும் கருதப்படுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்கர்கள் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்ளத் தொடங்கியபோதுதான் டிப்ஸ் வழக்கம் அமெரிக்காவில் அறிமுகமானது. முதலில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டது. டிப்ஸ் வழங்குபவர்கள், அடித்தட்டு வர்க்க ஊழியர்களை உருவாக்குவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், 21-ம் நூற்றாண்டில் இன்றும் அதன் சாதக பாதகங்களை அமெரிக்கர்கள் விவாதித்து வருகிறார்கள். தற்போது டிப்ஸ் வழங்கும் பழக்கம் அவர்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு பொருளாதார நிபுணர் ஒபர் அசர் வெளியிட்ட ஒரு கணக்கீட்டின்படி, அமெரிக்க உணவு விடுதி ஊழியர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் டிப்சாக வழங்கப்பட்டுள்ளது. ஊதியத்தை அடுத்து, ஊழியர்கள் பெறும் முக்கியத் தொகையாக டிப்ஸ் உள்ளது.

பிற ஆசிய நாடுகளைப் போல, சீனாவிலும் டிப்ஸ் வழங்கும் கலாசாரம் குறைவாகவே காணப்படுகிறது. அங்கு டிப்ஸ் என்பது லஞ்சத்துக்கு இணையாகக் கருதப்பட்டதால், பல்லாண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்தது. இன்றும் சீன உணவு விடுதிகளில் டிப்ஸ் என்பது கொஞ்சம் அரிதாகவே உள்ளது.

அங்கு உணவகங்களில் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் டிப்ஸ் வைப்பதில்லை. ஆனால், சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் சீன உணவகங்களில் டிப்ஸ் வைக்கும் கலாசாரம் உள்ளது. மேலும் சுற்றுலாவுக்கு வழிகாட்டும் நபர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் டிரைவர்களுக்கும் டிப்ஸ் அளிக்கப்படுகிறது.

ஜப்பானின் சமூக அமைப்பிலேயே டிப்ஸ் கலாசாரம் உள்ளடங்கி உள்ளது. திருமணங்கள், இறுதிச்சடங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகளின்போது டிப்ஸ் வழங்குவது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. ஆனால் பல நேரங்களில், டிப்ஸ் வாங்குவோரை கிண்டலடிப்பதும் நடக்கிறது.

ஜப்பானில் டிப்ஸ் கொடுப்போர், முதலில் நல்ல சேவையை எதிர்பார்க்கிறார்கள். நிகழ்ச்சிகளின்போது டிப்ஸ் வழங்குகையில், பணத்தை உறைக்குள் வைத்து மரியாதையாக கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

ஆனால் உணவு விடுதிகளில் டிப்ஸ் வழங்கப்படும்போது அதை அமைதியாக ஏற்க மறுப்பதற்கு ஊழியர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் 1955-ம் ஆண்டு, உணவகங்களில் ரசீது வழங்கும்போது, அதில் சேவைக் கட்டணத்தைச் சேர்க்கும் சட்டம் இயற்றப்பட்டது. ஐரோப்பா மற்றும் உலகின் பல நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி, டிப்ஸ் பணத்தை நம்பாமல் இருக்கச் செய்யவே இந்த முறை.

பிரான்ஸ் நாட்டின் இளைஞர்கள் பெரும்பாலும் டிப்ஸ் வழங்குவதில்லை என சமீபத்திய ஆய்வுகள் கூறினாலும், இந்த வழக்கம் அங்கு இருக்கவே செய்கிறது. 2014-ம் ஆண்டில், 15 சதவீத பிரான்ஸ் வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வழங்கமாட்டோம் எனத் தெரிவித்தனர்.

தென்ஆப்பிரிக்காவில், காரை பார்த்துக்கொள்ளவும் டிப்ஸ் வழங்கப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் இந்த வழக்கம் இல்லை.

தென்ஆப்பிரிக்காவில் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் நிலவும் நிலையில், ஓட்டுநர்களுக்கு பார்க்கிங் இடம் கண்டுபிடித்துக் கொடுப்பது, அவர்களின் வாகனங்களைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளைச் சிலர் செய்கிறார்கள். தென்ஆப்பிரிக்காவில் வாகனங்கள் திருடு போவது வாடிக்கையான விஷயம். எனவே, காரைப் பார்த்துக்கொள்வதற்கு சுமார் 2 டாலர் டிப்ஸ் அளிப்பதற்குப் பலரும் தயங்குவதில்லை.

சுவிட்சர்லாந்தில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் சிகை அலங்கார ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் டிப்ஸ் வழங்குவது வழக்கமாக உள்ளது. உலகில், குறைந்தபட்சக் கூலி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று, சுவிட்சர்லாந்து. உதாரணமாக அங்கு ஓட்டல் வெயிட்டர் பெறும் ஊதியம் 4 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ. 3 லட்சம்). எனவே அந்நாட்டு உணவக ஊழியர்கள் பெரிய அளவில் டிப்சை நம்பி இருப்பதில்லை.

சிங்கப்பூரில் ஓட்டல்கள், டாக்சி ஓட்டுநர்களுக்கு சிறிய தொகை டிப்சாக வழங்குவது குற்றம் இல்லை என்றாலும், கொடை அளிப்பது என்பது அங்கு சர்ச்சைக்குரிய விவகாரம் ஆகலாம். அந்நாட்டு அரசாங்க இணைய தளத்திலேயே, ‘டிப்ஸ் வழங்குவது இங்கு வாழ்க்கைமுறை கிடையாது’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

எகிப்திய மக்களின் வாழ்க்கை முறையில் டிப்ஸ் வழங்குவது என்பது ஒன்றிணைந்துள்ளது. வெயிட்டர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போன்றோருக்கு வசதியான எகிப்தியர்கள் டிப்ஸ் வழங்குவது வழக்கமான ஒன்று.

ரஷியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்தபோது, டிப்ஸ் வழங்குவது என்பது உழைக்கும் வர்க்கத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது. ‘சாயேவியே’ (‘டீ’க்காக) என்பது ரஷியர்கள் டிப்சுக்கு வைத்த பெயர். டிப்ஸ் வைக்கும் வழக்கம் 2000-களில் ரஷியாவுக்குத் திரும்பியது. ஆனால், வயதானவர்கள் இதனை அவமதிக்கும் விதமாகவே இன்றும் பார்க்கின்றனர்.

நல்ல உணவுக்காக, வெயிட்டருக்கு டிப்ஸ் வைப்பது அர்ஜென்டினாவில் பெரிய பிரச்சினையாக இருக்காது. எனினும் உணவுத் தொழிலுக்கான 2004 தொழிலாளர் சட்டப்படி, டிப்ஸ் வைப்பது அந்நாட்டில் சட்டவிரோதமானது. எப்படி இருந்தாலும் இன்றும் டிப்ஸ் வழங்குவது அங்கு புழக்கத்தில் உள்ளது. அர்ஜென்டினாவில் உணவக ஊழியர்கள் பெறும் வருமானத்தில் 40 சதவீதம் டிப்ஸ் தொகையாக இருக்கக்கூடும்.

சரி, நம் நாட்டு விஷயத்துக்கு வருவோம்.

இந்தியாவில் பல உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், டிப்ஸ் வைக்காமல் செல்வது சரி என்ற மனோபாவம் காணப்படுகிறது. பொதுவாக நம் நாட்டில், 15 முதல் 20 சதவீதம் வரை டிப்ஸ் வைக்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆசியாவிலேயே இந்தியர்கள்தான் அதிகளவில் டிப்ஸ் வைக்கின்றனர்.

Next Story